திருப்பூர்: மாதாந்திர உதவி பெறும் திட்டங்களில், திடீர் கட்டுப்பாடு விதித்து, ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் சமூக பாதுகாப்பு திட்டத்தில், ஐந்து வகையான திட்டங்களில், மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு இத்திட்டங்களில் உதவி கிடைக்கிறது.திடீரென, கடந்த சில மாதங்களாக, மாதாந்திர உதவி கிடைக்காததால், பயனாளிகளும், மாற்றுத்திறனாளிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வருவாய்த்துறை - சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது,'இரண்டு காஸ் சிலிண்டர் வைத்திருந்தாலோ, சொத்து பரிமாற்றம் நடந்திருந்தாலோ, ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக நகைக்கடன் பெற்றிருந்தாலோ, உதவியை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் வாயிலாக, விவரங்களை சேகரித்து, சரிபார்த்து வருகிறோம். தகுதியில்லாத பயனாளிகளுக்கு உதவி வழங்குவது ரத்து செய்யப்படும்' என்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலஅமைப்பான, 'சக் ஷம்' மாவட்ட தலைவர் ரத்தினசாமி கூறுகையில், ''சொத்து பரிமாற்றம், நகைக்கடன் பெறுவோரின் உதவியை ரத்து செய்யலாம். ஆனால், அத்தியாவசிய தேவையான, இரண்டு காஸ் சிலிண்டருடன் இணைப்பு இருந்தால், ரத்து செய்வது கவலைக்குரியது. தமிழக அரசு, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.