கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சேலம்: கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி வழங்குதல்; சரண்டர் விடுப்பு வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மாநில துணைத்தலைவர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரயில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு பயிற்சி
சேலம்: ரயில் கர்மயோகி திட்டத்தில், சேலம் ரயில்வே கோட்ட ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு, பணி மேம்பாட்டு பயிற்சி, நேற்று தொடங்கியது. கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் தொடங்கிவைத்தார். அதில், பயணியரிடம் இனிமையாக பழகுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டன.
வன்னியர் சங்க தலைவருக்கு அஞ்சலி
பனமரத்துப்பட்டி: சந்தைப்பேட்டையில், பா.ம.க., சார்பில், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவுக்கு, நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர், அவரது படத்துக்கு மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பெரமனுார், கோம்பைக்காடு உள்ளிட்ட இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பா.ம.க., வன்னியர் சங்கம், சமூக ஊடக பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
'வரி கட்டாதோர் பட்டியல் வெளியாகும்'
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சியில், 2022 - 23 வரை, சொத்து வரி நிலுவைத்தொகை, 6 லட்சத்து, 9,000 ரூபாய்; குடிநீர் கட்டணம், ஒரு கோடியே, 32 லட்சத்து, 3,000; கடை வாடகை, ஒரு கோடியே, 4 லட்சத்து, 88 ஆயிரம்; திடக்கழிவு சேவை கட்டணம், 9 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் நிலுவை உள்ளது. இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் மங்கையகரசன் கூறுகையில், ''சொத்து வரி, குடிநீர் கட்டணம், வாடகை கட்டணம் செலுத்தாதவர், உடனே நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வரி கட்டாதோர், பெயர் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார்.
முனியப்பன் கோவில் திருவிழா
சேலம்: குகை, கார்கானா முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி சத்தி அழைத்தல் நேற்று நடந்தது. அதில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பழம், தேன் உள்ளிட்ட அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சக்தி அழைத்தல், காளியம்மன் பூங்கரகம், அக்னி கரகம், பால்குடம் ஆகியவற்றுடன் ஊர்வலம் நடந்தது. மதியம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாவிளக்கு, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை, 6:00 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் பவனி வருதல், சத்தாபரணம், நாளை இரவு, 8:00 மணிக்கு முனியப்பனுக்கு கும்ப பூஜை நடக்கிறது.
கல்லுாரியில் பார்வையாளர் அரங்கம்
ஆத்துார்: வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சித்ரா தலைமையில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நேற்று, கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணியிடம் அளித்த மனு: 1972ல் தொடங்கப்பட்ட, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி, தற்போது, 50ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இங்கு, 1,000 பேர் அமரும்படி, திறந்தவெளியில் மேற்கூரையுடன் பார்வையாளர் அரங்கம், நிர்வாக அலுவலக கட்டடம், இணைய வசதி கொண்ட நுாலகம் போன்ற அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும்.
முதல்வரிடம் வணிகர் சங்கம் மனு
ஆத்துார்: ஆத்துார் வணிகர் சங்கத்தலைவர் ரவிசங்கர், செயலர் ஹபீப்உசேன் உள்ளிட்டோர், நேற்று முன்தினம், ஆத்துார் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த மனு: ஆத்துாரை தலைமையிடமாக கொண்டு புது மாவட்டம் அமைக்க வேண்டும். ஆத்துார் புறவழிச்சாலையில் விபத்தை தவிர்க்க, 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். 99 சதவீத கட்டடங்கள், கட்டட வரைபடத்தில் இருந்து சிறு மாற்றங்களுடன் உள்ளன. இவற்றை சிலர் பயன்படுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். அப்படி உள்ள கட்டடங்களுக்கு, தமிழக அரசு மூலம் சிறு அபராதம் விதித்து, இத்தகைய தவறு ஏற்படாதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கண்டக்டர் கன்னத்தில் 'பளார்'
சேலம்: எல்லாவூரில் இருந்து, நேற்று மதியம் அரசு டவுன் பஸ் சேலத்துக்கு புறப்பட்டது. டிரைவர் சங்கர் ஓட்டினார். சர்க்கார்கொல்லப்பட்டி, பாறை வட்டத்தை சேர்ந்த, கண்டக்டர் அண்ணாமலை, 50, பணியில் ஈடுபட்டிருந்தார். அய்யம்பெருமாம்பட்டி பஸ் ஸ்டாப்பில், பயணியரை இறக்கிவிட்டபோது, எதிரே, மதுபோதையில் மொபட்டில் வந்தவர், கண்டக்டரிடம் தகராறு செய்து, அவரை கன்னத்தில் அறைந்துவிட்டார். கண்டக்டர் நிலைகுலைந்த நிலையில், போதை நபர், தப்பிவிட்டார். கண்டக்டர் புகார்படி சூரமங்கலம் போலீசார், 'போதை' நபரை தேடி வருகின்றனர்.
விபத்தில் மெக்கானிக் பலி
மேட்டூர்: கோல்காரன்பட்டியை சேர்ந்தவர், முருகன், 22. இருசக்கர வாகன மெக்கானிக்.நேற்று முன்தினம் இரவு, 9:50 மணிக்கு, பதிவெண் இல்லாத, 'அப்பாச்சி' பைக்கில், மேட்டூர் ஆர்.எஸ்., அருகே சென்றபோது, எதிரே வந்த, அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. முருகன், மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE