மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை போல, தன்னையும் தமிழக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆயுள் கைதி ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பி உள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில், மதுரை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ரவிச்சந்திரனுக்கு, தி.மு.க., அரசு அமைந்த பிறகு மாதந்தோறும் 'பரோல்' வழங்கப்படுகிறது.தற்போது, அவர் துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் தாயாருடன் வசிக்கிறார். அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:நீண்டகாலமாக தமிழக அரசின் ஏழு பேர் விடுதலை முடிவிற்கு இசைவு தராமல் காலம் தாழ்த்திய கவர்னரிடம், மீண்டும் இவ்விவகாரத்தை கொண்டு செல்ல விரும்பாத உச்ச நீதிமன்றம், தன் உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.
இதேபோல தங்கள் தலைமையிலான அரசுக்கும் உள்ளார்ந்த அதிகாரம் உண்டு என சுட்டிகாட்டி மனுக்கள் அனுப்பினேன். எனவே எஞ்சியுள்ள நான் உட்பட ஆறு பேரின் விடுதலை தீர்மானத்தை, தமிழக அரசுக்கே உரிய நிர்வாக ஆணைப்படி என் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.