ஏற்காடு : ஏற்காட்டில், 45வது கோடை விழா, மலர்கண்காட்சி, கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக துவங்கியது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 45-வது கோடை விழா, மலர்கண் காட்சி தொடக்க விழா, நேற்று மாலை நடந்தது. வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர். முன்னதாக பாரம்பரியத்தை பறைசாற்றும்படி பூங்கா முன் கலைநிகழ்ச்சி நடந்தது.
கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலா பயணியர் என, அனைத்து தரப்பினரையும் கவரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அண்ணா பூங்காவில், 5 லட்சம் அரிய மலர்களால் கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
மேட்டூர் அணை, மகளிர் இலவச பயணத்தை குறிக்கும்படி அரசு பஸ், வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி செல்பி பாயின்ட், மாட்டு வண்டி, மீண்டும் மஞ்சைப்பை, சின்சான் ஆகியவை, பூக்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் பல்வேறு வகை மா வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தர்ப்பூசணி பழத்தில், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில், உதயநிதி உருவப்படமும் செதுக்கப்பட்டிருந்தன. கண்ணாடி மாளிகையில், 1,200 அலங்கார பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சுற்றுலா பயணியர், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
வரும் நாளில் நாய் கண்காட்சி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப்போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் மட்டுமின்றி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. அதேபோல் கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜூன், 1 வரை கோடை விழா நடப்பதால், சுற்றுலா பயணியர் வந்து சிறப்பிக்க, மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE