கெலமங்கலம் அடுத்த திம்ஜேப்பள்ளி கிராமத்தில், கடந்த வாரம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சிலர், மண்ணில் புதைந்திருந்த வேணுகோபால சுவாமி கற்சிற்பத்தை கண்டெடுத்தனர். இதை ஆய்வு செய்ய, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம் கிருஷ்ணன், நிர்வாகிகள் ராசு, பாலசுந்தரம் ஆகியோர் சென்றனர். அப்போது, அப்பகுதியில் இருந்த, 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, சாமரம் வீசும் போர் வீரன் நடுக்கலை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக, அறம் கிருஷ்ணன் கூறியதாவது:
இந்த நடுக்கல்லில், போர் வீரன் வலது கையில், 'யு' வடிவ கத்தியும், இடது கையில் சாமரமும் வைத்திருக்கிறார். கீழ் பகுதியில் ஒரு வீரன் கையில் வில்லுடன் இறந்து கிடக்கிறான். மாவட்டத்தில் முதல்முறையாக சாமரம் வீசும் போர்வீரனின் நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை ஆய்வு செய்தபோது, இப்பகுதியில் குறுநில மன்னனுக்காக போர் செய்யும் திறமை கொண்ட வீரனுக்கு, சாமரம் வீசவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த நடுக்கல்லில், வில் வீரன் ஒருவனுடன் சண்டையிட்டு, அவரை கொன்று விட்டு, சாமரம் வீசும் வீரனும் இறந்திருக்க வேண்டும். அதை சிற்பமாக காட்சிப்
படுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் மண்ணிலிருந்து வெளியே எடுத்த வேணுகோபால சுவாமி சிலை, 700 ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்.
இப்பகுதியில் ஏராளமான இரும்பு கசடுகள், உடைந்த சிவப்பு, கறுப்பு மண்பானை ஓடுகள் கிடைக்கின்றன. மேலும், இங்குள்ள நீளமான, 10க்கும் மேற்பட்ட கல் கம்பங்களை பார்க்கும்போது, விஜயநகர மன்னர்கள் காலத்தில், கல் மண்டபம் மாதிரியான சிறிய கோவில்கள் கட்டப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE