கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க, 2வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி பேசினார்.
மாநாட்டில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி பசும்பாலுக்கு, 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு, 51 ரூபாயும் உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஆவின் பால், ஒரு லிட்டருக்கு, 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்ததால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, மாநில அரசு, 300 கோடி ரூபாயை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும். பால் கொள்முதலை, 32 லட்சத்திலிருந்து ஒரு கோடி லிட்டராக உயர்த்த வேண்டும். பாலுக்கான பாக்கி முழுவதையும் உடனே வழங்க வேண்டும். பால் திருட்டு, சத்து, அளவு குறைவு ஆகியவற்றை தடுக்கவும், ஆரம்ப சங்கங்களை பாதுகாக்கவும், பாலை எடுக்கும்போது அளவு, தரம் ஆகியவற்றை குறித்துக் கொடுக்க வேண்டுமென்ற மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஆவின்பால், பால் பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்த விற்பனை மையங்களை அதிகப்படுத்தி, தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
----------