வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஹிந்திக்கு இணையாக தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மோடி முன்னிலையில் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசு பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டார். சில வரிகளை ஆங்கிலத்தில் பேசும் போதும், ' இண்டியன் யூனியன்' என்றே குறிப்பிட்டார். தமிழகம் முன்னேறியதற்கு ‛‛திராவிட மாடல் ஆட்சி தான் காரணம்'' என்றும் பேசினார்
சென்னை நேரு உள்விளையாடு அரங்கில் இன்று நடந்த ரூ 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்ட பணிகள் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், தமிழக கவர்னர் என்.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் நிடின் கட்கரி உள்ளிட்டோரும் காணொளி வழியாக கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
' தமிழகம் கல்வி, தொழில், பொருளாதாரம், ஏற்றுமதி என எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் பொருளாதார ரீதியாக மட்டுமில்லாமல் சமூக நீதியிலும் முன்னுதாரணமாக விளங்குகிறது. இதுவே திராவிட மாடல் ஆட்சி என அழைக்கப்டுகிறது
ஜி.எஸ்.டி., நிலுவை தொகை 14 ஆயிரம் கோடி
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 8.4 சதவீதம். தோல் பொருள் ஏற்றுமதியில்18 சதவீதம். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கார்களில் தமிழகத்தின் பங்கு 32.5 சதவீதமாக உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு 6 சதவீதமாக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்கு முக்கியமானது. மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 1.21சதவீதம் தான். தமிழகத்தின் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 14 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
![]()
|
தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்
தமிழை ஹிந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும். உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரிக்க வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம் நீட் தேர்வு விலக்கு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை காக்க இதுவே சரியான தருணம்.
கருணாநிதியின் வழியில் தமிழகம் எப்போதும் உரிமைக்கு கை கொடுக்கும்; உறவுக்கு குரல் கொடுக்கும். தமிழகத்திற்கு கூடுதல் திட்டங்கள் மற்றும் நிதியை வழங்க வேண்டும் என்றார். விழா உரையை முடித்த ஸ்டாலினை மோடி தட்டிக் கொடுத்து பாராட்டினார்.