த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை:
ராஜிவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன் விடுதலையில், தமிழக காங்., தலைவர் அழகிரி சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஒருபுறம் போராட்டம், மறுபுறம் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் உறவு என, பதவி சுகத்தின் உச்சத்தில் உள்ளார். அவர் தான், 'கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை' என, பட்டவர்த்தனமாக போட்டு உடைச்சிட்டாரே... தமிழக காங்கிரசாரை பொறுத்தவரை, கொள்கை துண்டு போன்றது; கூட்டணி வேஷ்டி போன்றது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும், ரேஷன் அரிசி கடத்தல் மட்டும் நிற்பதில்லை. இதற்கு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் உடந்தை என்பது தான் உண்மை. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, மாவட்ட, மாநில எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை, தமிழக அரசு போக்க வேண்டும். நம்ம ஊர் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம், அண்டை மாநிலங்களில் சந்தி சிரிக்கிறது... இனியாவது, தமிழக அரசு விழித்து கொள்வது நல்லது!
பா.ஜ., மாநில துணைத் தலைவர் சம்பத் பேட்டி:
தமிழக அரசு, 'டாஸ்மாக்'கை நம்பி உள்ளது. திடீரென பிரதமர் மோடி டாஸ்மாக்கை மூடிவிட்டால், என்ன செய்வர். புதுச்சேரி, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரியை குறைக்கும் போது, ஏன் தமிழகத்தில் முடியவில்லை. என்னது... 'டாஸ்மாக்'கை மூட பிரதமர் மோடியால் முடியுமா...? அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், உடனே அதை செய்யுங்க... ஒட்டுமொத்த பெண்களின் ஓட்டுகளும் உங்களுக்கு தான்!
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை:
ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை, பிரசவம் போன்ற தேவைகளுக்கு பயன்படுவதே இல்லை. 100 கி.மீ., கடந்து மேல் சிகிச்சைக்கு செல்ல வேண்டியுள்ளது. தாளவாடியில் உள்ள நோயாளிகள், சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகாவுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இந்நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மக்களை தேடி மருத்துவம்' என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கின்றனரே... மக்களே தேடி போனாலும், சிகிச்சை கிடைக்காத இந்தச் சூழலை என்னவென்று சொல்வது?
தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம்:
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நடமாட முடியாது, என அமைச்சர் ஒருவர் பேசிஉள்ளார். அவரை மிரட்டி அச்சுறுத்தலாம் என தி.மு.க., நினைத்தால், தி.மு.க., ஒட்டு மொத்தமாக அழிக்கப்படும். மாநில தலைவர் மீது கை வைத்தால், தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும் என, சொல்ல விரும்பவில்லை; செய்து காட்டுவோம். 'சாப்ட்' ஆன கட்சின்னு, பா.ஜ.,வுக்கு தமிழகத்துல ஒரு, 'இமேஜ்' இருக்குது... இந்த மாதிரி ஏடாகூடமா பேசி, அதை கெடுத்துடாதீங்க!