வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : பிரதமர் பங்கேற்ற அரசு விழாவில், பா.ஜ., மற்றும் தி.மு.க., தொண்டர்கள், தொடர்ந்து போட்டி கோஷம் எழுப்பியதால், பதற்றம் நிலவியது.
சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில், மத்திய அரசு சார்பில், இன்று நிறைவடைந்த திட்டங்கள் துவக்க விழா, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில், பிரதமர் நரேந்திரமோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழா மாலை 5:45 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாலை 2:00 மணியில் இருந்து, அரங்கிற்கு பா.ஜ., மற்றும் தி.மு.க., தொண்டர்கள் வந்தனர். மேடையின் இடது புற கேலரியில் பா.ஜ., தொண்டர்களும், வலது புறம் மற்றும் மேடைக்கு எதிரே இருந்த கேலரிகளில், தி.மு.க., தொண்டர்களும் அமர வைக்கப்பட்டனர்.
மாலை 3:00 மணி அளவில், பா.ஜ., நிர்வாகிகள் அரங்கிற்குள் வந்தபோது, அக்கட்சி தொண்டர்கள் 'பாரத் மாதா கீ ஜே...' எனக் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு தி.மு.க.,வினர் 'கலைஞர் வாழ்க' எனக் கோஷம் எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து இரு தரப்புக்கு இடையிலும், கோஷம் எழுப்புவதில் போட்டி ஏற்பட்டது. பா.ஜ.,வினர், 'மோடி, மோடி' என கத்த, தி.மு.க.,வினர் கருணாநிதி, ஸ்டாலின் பெயரை கூறி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ச்சியாக, தி.மு.க.,வினர், 'வாழ்க வாழ்கவே' எனக் கூற, பதிலுக்கு பா.ஜ.,வினர் 'மோடி' எனக் கூறினர். அடுத்து தி.மு.க.,வினர், சி.எம்., என கத்த, பதிலுக்கு பா.ஜ.,வினர் பி.எம்., எனக் கத்தினர்.

தி.மு.க.,வினர் கோஷம் அதிகரித்தபோது, பா.ஜ.,வினர் தாங்கள் அணிந்திருந்த காவி நிற துண்டை, தலைக்கு மேலே துாக்கி சுற்றியபடி கோஷங்கள் எழுப்ப, தி.மு.க.,வினர் துண்டு இல்லாமல் தடுமாறினர்.
அதேபோல், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'ஒன்றிய அரசு' எனக் கூறிய போதெல்லாம், பா.ஜ.,வினர் சத்தமிட்டனர். ஆனால் பிரதமர் மேடைக்கு வந்து, அனைவரையும் நோக்கி கையசைத்தபோது, தி.மு.க.,வினரும் பதிலுக்கு கையசைத்தனர்.
முதல்வர் பேசுகையில், தி.மு.க.,வினர் கை தட்ட, பிரதமர் பேசியபோது, பா.ஜ.,வினர் கை தட்ட, அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாமல் தவித்தனர். பிரச்னை எதுவுமின்றி கூட்டம் முடிந்ததும், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE