வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ-ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தன் மனைவியை நிறுத்தாமல், கூட்டணி கட்சித் தலைவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு 31 எம்.பி.,க்கள் அனுப்பப்படுகின்றனர். இதில், 11 பேரின் பதவிக்காலம், ஜூலை 4ல் முடிகிறது. இதில், ஐந்து பேர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் சமாஜ்வாதியையும், இரண்டு பேர் பகுஜன் சமாஜ் கட்சியையும், ஒருவர் காங்கிரசையும் சேர்ந்தவர்.
இந்த, 11 இடங்கள் உட்பட, 15 மாநிலங்களில் காலியாகவுள்ள, 57 ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான தேர்தல், ஜூன் 10ல் நடக்க உள்ளது.இதில், உத்தர பிரதேசத்தில் எட்டு இடங்களை பா.ஜ., கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. அதுபோல, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு, மூன்று இடங்கள் கிடைக்கும்.ஜாவத் அலி கானை, ஏற்கனவே வேட்பாளராக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். இதைத் தவிர, காங்கிரசில் இருந்து விலகி, சுயேச்சையாக போட்டியிடும் மூத்த தலைவர் கபில் சிபலுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, சமாஜ்வாதியும், ராஷ்ட்ரீய லோக் தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது, ஒரு ராஜ்ய சபா இடம் தருவதாக, ஜெயந்த் சவுத்ரிக்கு அகிலேஷ் யாதவ் உறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சமாஜ்வாதி சார்பில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிடும்படி, அகிலேஷ் யாதவ் கூறியதாக தெரிகிறது. ஆனால், அதை ஏற்க சவுத்ரி மறுத்திருந்தார்.
இதையடுத்து, மூன்றாவது இடத்தில், தன் மனைவியும், முன்னாள் எம்.பி.,யுமான டிம்பிள் யாதவை நிறுத்த, அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு, கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மூன்றாவது எம்.பி., பதவிக்கான வேட்பாளராக, ஜெயந்த் சவுத்ரியின் பெயரை அகிலேஷ் யாதவ் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக, நேற்று காலையில் இருவரும் பேசியுள்ளனர். இதன்படி, ராஷ்ட்ரீய லோக் தளத்தின் சார்பில், ஜெயந்த் சவுத்ரி வேட்பாளராக இருப்பார் என்றும், அவருக்கு சமாஜ்வாதி ஆதரவு தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE