ஊட்டச்சத்து குறைபாடும், நோய்களும்!| Dinamalar

ஊட்டச்சத்து குறைபாடும், நோய்களும்!

Updated : மே 27, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (1) | |
'உணவே மருந்து' என்ற காலம் போய் 'மருந்தே உணவு' என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாம் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தால் சத்து மாத்திரைகளை உணவில் ஒரு அங்கமாகவே எடுத்து கொள்ளும் அவலநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு, ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில்
ஊட்டச்சத்து குறைபாடும், நோய்களும்!

'உணவே மருந்து' என்ற காலம் போய் 'மருந்தே உணவு' என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாம் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தால் சத்து மாத்திரைகளை உணவில் ஒரு அங்கமாகவே எடுத்து கொள்ளும் அவலநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.


இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு, ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இதனால், பெண்களும், குழந்தைகளும் அதிகம் பாதிப்பு உள்ளாகின்றனர்.

எட்டு ஆரஞ்சு சாப்பிட வேண்டும்


பொருளாதார சூழ்நிலையால், ஏழைகளால் ஊட்டச்சத்துமிக்க பல விதமான உணவுகளை வாங்கி உட்கொள்ள முடியவில்லை என்பது, இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் விளையும் பயிர்களில் சத்துக்கள் தொடர்ந்து குறைந்து வருவது மற்றொரு முக்கிய காரணமாகும். நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் ஒரு ஆரஞ்சு பழத்தில் இருந்து கிடைத்த சத்தை, இன்று எட்டு ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதேபோன்று, காய்கறிகள் மற்றும் அரிசி வகைகளில் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஒருவர் தேவையான அளவு உணவை உண்டாலும், அவருக்கு தேவையான சத்து அவருக்கு கிடைக்காமல் போகிறது. இதை ஈடு செய்வதற்காக அவர், சத்து மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.
செறிவூட்டப்பட்ட அரிசி


உதாரணத்திற்கு, இந்தியர்கள் அதிகம் சாப்பிடும் உணவான அரிசியில் சத்துக்கள் குறைந்துவிட்டன. இதை சரி செய்வதற்காக, 'செறிவூட்டப்பட்ட அரிசி' என்ற ஒன்றை அரசு அறிமுகப்படுத்துகிறது.இந்த அரிசி எப்படி தயாரிக்கப்படுகிறது என்றால், வழக்கம்போல் நிலத்தில் விளைந்த அரசியை மாவாக்கி அதில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி 12, துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2 போன்ற சத்துக்கள் செயற்கையாக சேர்க்கப்படும், பின் அந்த மாவை இயந்திரத்தில் இட்டு மீண்டும் அரிசியாக மாற்றுகின்றனர்.

பின், 99 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.இந்த அவலநிலைக்குக் காரணம், ஒற்றை பயிர் தொழில் முறை விவசாயமும், ரசாயன, பூச்சிகொல்லி பயன்பாடுகளும் தான். கடந்த, 1970-ம் ஆண்டு வரை, இந்தியாவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அரிசி ரகங்கள் இருந்தன. ஆனால், அவை இப்போது வெறும், 6,000 ரகங்களாகக் குறைந்து விட்டது.


பாரம்பரிய நெல் ரகங்களின் அழிவுகுறிப்பாக, 12,000 ஆண்டு விவசாய வரலாறு கொண்ட நம் தமிழ்நாட்டிலும், பாரம்பரிய அரிசி ரகங்களில் விளைச்சல் பெருமளவு குறைந்துவிட்டது. எலும்பை வலுவாக்க உதவும் காட்டுயானம், நரம்புகளை வலுவாக்கும் மாப்பிள்ளை சம்பா, உடல் கழிவுகளை வெளியேற்றும் கருங்குறுவை, பெண்களின் கருப்பையை சுத்தப்படுத்தும் பூங்கார் போன்ற ஒவ்வொரு பாரம்பரிய அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.இவற்றையெல்லாம், இழந்துவிட்டு ஒவ்வொரு நோய்களுக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்கிறோம்.

மூட்டு வலியும் சர்க்கரை நோயும் இப்போது அனைவருக்கும் வரக் கூடிய ஒரு நோயாக மாறிவிட்டது. நம் தாத்தா, பாட்டிகள் 60 - 80 வயது வரை திடக்காத்திரமாக வாழ்ந்து மறைந்தார்கள். இப்போதைய தலைமுறையோ 40 வயதிலேயே மாதந்தோறும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.மண்ணில் சத்து வேண்டும்


நாம் உண்ணும் உணவில் சத்து இல்லாமல் போனதற்கு மிக அடிப்படையான காரணம், அந்த உணவு விளைந்த மண்ணில் சத்து இல்லாமல் போனது தான். எனவே, ஊட்டச்சத்து குறைப்பாட்டையும், நாள்பட்ட நோய்களுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால், மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். வெறும் மருந்து மாத்திரைகளை மட்டுமே உட்கொண்டு நம்மால் எப்படி உயிர் வாழ முடியாதோ, அதேபோல், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ரசாயனங்களை மட்டும் போட்டு பயிர்களை விளைவிக்க முடியாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மரங்களின் இலை தழைகளில் இருந்தும் விலங்குகளின் கழிவுகளில் இருந்துமே மண்ணுக்கு ஊட்டம் அளிக்க முடியும்.

அப்படி செய்தால், மக்களின் ஆரோக்கியத்திற்கு செலவிடப்படும் பல கோடி மதிப்பிலான செலவுகள் மிச்சமாகும்; நாமும் நலமாக வாழ்வோம். ஆகவே, நாம் உண்ணும் உணவு முறையில் மட்டுமின்றி, விவசாய முறையிலும் மாற்றம் வர வேண்டியது காலத்தின் கட்டாயம். மண் வளம் இழப்பதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் எப்படி அவதிப்படுகின்றனர் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.- மண் காப்போம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X