ரூ.31,530 கோடி திட்டம் துவக்கி வைத்தார் பிரதமர்!

Updated : மே 28, 2022 | Added : மே 26, 2022 | கருத்துகள் (31+ 44) | |
Advertisement
சென்னை : சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில், 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டப் பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மத்திய அரசு சார்பில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மதுரை - தேனி அகல ரயில் பாதை; தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை ஆகியவற்றில், ரயில் சேவையை கொடியசைத்து
PM Modi, CM Stalin, Vanakkam_Modi, DMK, BJP, Stalin, MK Stalin, Modi

சென்னை : சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில், 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டப் பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மத்திய அரசு சார்பில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மதுரை - தேனி அகல ரயில் பாதை; தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை ஆகியவற்றில், ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை - பெங்களூரு விரைவு சாலை உட்பட, புதிதாக ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றின் மொத்த மதிப்பு, 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய்.


'நீட்'டுக்கு விலக்கு கொடுங்கள்! விழாவில் முதல்வர் கோரிக்கை

''மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை பிரதமர் விரைந்து வழங்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடந்த, பல்வேறு திட்டங்கள் துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தபின், பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை துவக்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. இன்று துவக்கி வைக்கப்படும் திட்டங்கள் எல்லாம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான திட்டங்கள்.

கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வழிகளில், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தமிழகம் பங்களித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட, தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது. வெறும் பொருளாதாரத்தை சார்ந்ததாக மட்டுமல்லாது, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் தமிழகத்தின் வளர்ச்சி. அதனால் தான் இதை, திராவிட மாடல் வளர்ச்சி என்கிறோம்.

நாட்டின் வளர்ச்சியிலும், மத்திய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழகம் முக்கிய பங்களிப்பை தருகிறது. இது, பிரதமருக்கு தெரியும் என்று நம்புகிறேன். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் 9 சதவீதம்; மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 6 சதவீதம்; மொத்த ஏற்றுமதியில் 8.4 சதவீதம், தமிழகத்தின் பங்களிப்பாக உள்ளது. ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம்; கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம்; தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது.

ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 சதவீதம் மட்டுமே. எனவே, தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கும் பங்கிற்கு ஏற்ப, மத்திய அரசின் திட்டங்களிலும், நிதி ஒதுக்கீட்டிலும் பங்களிப்பை உயர்த்த வேண்டும். அதுதான், உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியாக அமையும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், மாநில அரசின் பங்களிப்பும் மகத்தானது. நெடுஞ்சாலைத் துறையில் நாட்டிலேயே அதிக மூலதன செலவுகளை செய்யும் மாநிலமாக, தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.


தகுந்த தருணம்:

தமிழகத்தில் 44 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு இந்த ஆண்டு 18 ஆயிரத்து 218 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை கட்டமைப்புகளை உருவாக்க, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த முனைப்பாக இருக்கிறோம். அதிக அளவிலான திட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களில், தொடக்கத்தில் குறிப்பிடக்கூடிய மத்திய அரசின் நிதி பங்கு, திட்டம் முடியும் வரை தொடர வேண்டும். பயனாளிகள் பங்களிப்போடு செயல்படுத்தும் திட்டங்களில், அவர்கள் செலுத்தாதபோது, அதை மத்திய, மாநில அரசுகள் சமமாக ஏற்க வேண்டும். தமிழகத்தில், மீனவர் சமுதாய மக்களின் முக்கியமான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுத்து, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு தகுந்த தருணம் இது என்பதை, பிரதமருக்கு நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.


வழக்காடு மொழி:

தமிழகத்திற்கு, இந்தாண்டு மே 15 வரை வர வேண்டிய ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிலுவைத் தொகை, 14 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் வருவாய் முழுமையாக சீரடையாமல் இருப்பதால், ஜி.எஸ்.டி. இழப்பீடு காலத்தை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். உலக சொம்மொழிகளில் ஒன்றான தமிழை, ஹிந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.


முழு ஒத்துழைப்பு:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை பிரதமர் விரைந்து வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளில் இருக்கும் நியாயத்தை பிரதமர் உணர்வார் என நம்புகிறேன். 'உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற கருணாநிதியின் கூற்றுதான், தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைய, அனைவரும் இணைந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தமிழில் மருத்துவம் தருகிறேன்! ஸ்டாலினுக்கு மோடி பரபரப்பு பதில்

''மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தமிழ் வழியில் படிக்க முடியும் என்பதால், புதிய கல்விக் கொள்கை தமிழக இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வணக்கம். மீண்டும் தமிழகத்துக்கு வருவதில், எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நிலம் மிகவும் சிறப்பானது. இங்குள்ள மக்கள், கலாசாரம், தமிழ் மொழி என, அனைத்தும் மிகச் சிறப்பானவை. அதைத்தான், தமிழ் கவிஞர் பாரதியார், 'செந்தமிழ் நாடு எனும் போதினிலே, இன்ப தேன் வந்து பாயுது காதினிலே...' என, அழகாக பாடியுள்ளார்.


தமிழின் பெருமை:

தமிழகத்தில், ஒவ்வொரு துறையிலும், யாரோ ஒருவர் சிறந்து விளங்குகின்றனர். சமீபத்தில் இந்திய காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டி குழுவினர்களை என் வீட்டில் சந்தித்தேன். இந்திய அணி இந்த முறை மிக சிறப்பாக செயல்பட்டது. அதில் நம் அணி பெற்ற, 16 பதக்கங்களில், தமிழகத்தினர் மட்டுமே, ஆறு பதக்கங்களை பெற்றுள்ளனர். இது இந்திய அணியின் வெற்றிக்கு, தமிழகம் அளித்துள்ள மிகச்சிறந்த பங்களிப்பாகும். தமிழ் மொழி நிலையானது, நிரந்தரமானது. தமிழ் கலாசாரம் சர்வதேச அளவிலானது.

சென்னையில் இருந்து கனடா வரை, மதுரையில் இருந்து மலேஷியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை, பொங்கல் மற்றும் புத்தாண்டு விழாக்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன. கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழாவில், தமிழகத்தின் மைந்தன் மத்திய அமைச்சர் முருகன், தமிழகத்தின் பாரம்பரிய உடையில் நடந்து சென்று, சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார். இது தமிழகத்தை சர்வதேச அரங்குக்கு எடுத்து சென்றது.


உள்ளூர் கலாசாரத்தில் உறுதி:

நாம் தமிழகத்தின் வளர்ச்சிக்கான பயணத்தை கொண்டாட இங்கு இணைந்துள்ளோம். 31 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது அல்லது துவங்கப்பட்டுள்ளது. சாலையின் உள் கட்டமைப்பு மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியுடன் நேரடி தொடர்புள்ளது.


பொருளாதாரம் உயரும்:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் படி, சென்னை கலங்கரை விளக்கம் திட்டத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை, சர்வதேச அளவிலான தரத்தில், குறைந்த விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை, மிகுந்த சவாலுடன் கட்டமைத்துள்ளோம். இது சாதனைக்குரிய திட்டமாகவும், சென்னையில் அமைந்திருப்பதும் மகிழ்ச்சிக்குரியது. திருவள்ளூர் - பெங்களூரு, எண்ணுார் - செங்கல்பட்டு வரையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டமானது, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மக்களுக்கு, இயற்கை எரிவாயு வினியோகம் எளிதாகும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சென்னை துறைமுகத்தை பல்நோக்கு சரக்கு துறைமுகமாக்கும் வகையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களிலும், இதுபோன்ற பல்முனை சரக்கு பூங்காக்களை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளோம். இந்த திட்டங்கள் எல்லாம், நாட்டின் இளைஞர்களுக்கு முன்மாதிரி மாற்றத்தை ஏற்படுத்தும். வேலைவாய்ப்பு மற்றும் தற்சார்பு நிலையை ஊக்கப்படுத்தும்.

உங்களில் ஒவ்வொரும், நீங்கள் வாழ்ந்ததை விட சிறந்த தரத்துடன் உள்ள வாழ்க்கையும், சிறந்த எதிர்காலத்தையும் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்க நினைப்பீர்கள். இதற்கு அடிப்படை தேவைதான் தலைசிறந்த உள்கட்டமைப்பு. தரமான உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் அளித்துள்ள நாடுகளே வளர்ச்சி பெற்ற நாடாக மாறியுள்ளதுதான் வரலாறு.


உள்கட்டமைப்பே வளர்ச்சி:

அதனால்தான், இந்தியாவில் தலைசிறந்த தரம் மற்றும் ஸ்திரத்தன்மை உள்ள உள்கட்டமைப்பை ஏற்படுத்த, முழு கவனம் செலுத்துகிறோம். அதுவும் சமூக மற்றும் உள்கட்டமைப்பை குறிப்பிடுகிறேன். சமூக கட்டமைப்பை மேம்படுத்தி, ஏழைகளின் நலனை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று செயல்படுகிறோம். அனைவருக்கும் கழிவறை, வீட்டு வசதி, நிதிசார் உள்ளடக்கம் கொண்ட அனைத்தும், அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை நோக்கி செயல்படுகிறோம்.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் கிடைக்க, உறுதியுடன் பணியாற்றுகிறோம். இதில், யாரையும் விடுபடாமல், பாரபட்சம் இன்றி திட்டங்கள் நிறைவேற்றப்படும். உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தும்போது, இளைஞர்கள் அதிக அளவில் பயன்பெறுவர். சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஒருங்கிணைந்த உள் கட்டமைப்பு என்பது சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது உள்கட்டமைப்பில், எரிவாயு குழாய் பாதைகள், நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்படுகின்றன. அனைத்து கிராமங்களிலும், அதிவேக இன்டர்நெட் வசதி கிடைக்கும் வகையில் செயல்படுகிறோம். இது எத்தனை மாற்றங்களை உருவாக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.


ரூ.100 லட்சம் கோடி திட்டம்:

சில மாதங்களுக்கு முன், பிரதமரின் கதிசக்தி திட்டத்தை துவக்கினோம். வரும் ஆண்டுகளில், இந்தியாவில் அனைத்து துறைகளிலும், சிறந்த உள்கட்டமைப்பு உள்ள நாடாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். செங்கோட்டையில் இருந்து இந்த திட்டம் குறித்து பேசினேன்; 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க இந்த திட்டத்தை நோக்கி பணிகள் நடக்கின்றன. வரலாற்றில் முதல்முறையாக, நடப்பு நிதியாண்டில், 7.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, உள் கட்டமைப்பு பணிகள் நடக்கின்றன. இந்த திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்படும்.


தமிழை பிரபலப்படுத்த திட்டம்:

தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்த, மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு, புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசே முழு நிதியை ஒதுக்கியுள்ளது. இதில், பெரிய -நுாலகம், கருத்தரங்கு கூடங்கள், பல்லுாடக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், என் வாரணாசி தொகுதியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில், தமிழ் கவிஞர் பாரதியார் பெயரில் இருக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையில், இந்தியாவின் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழில் மருத்துவம்:

மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை, தாய்மொழியிலேயே கற்பிக்க, புதிய கல்வி கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பலன் பெறுவர். சுதந்திர இந்தியாவின், 75வது ஆண்டு அமுத பெருவிழாவை நாம் கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் சுதந்திரத்துக்கு போராடிய, நம் சுதந்திர போராட்ட வீரர்கள் பல கனவுகளை கண்டனர். அவற்றை நிறைவேற்றுவது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மை தயார்படுத்தி கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் இணைந்து, இந்தியாவை பலமானதாகவும், மேலும் வளமானதாகவும் மாற்றுவோம். மீண்டும் ஒருமுறை வளர்ச்சி திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

இலங்கைக்கு உதவி: பிரதமர் உறுதி

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: நம் அண்டை நாடான இலங்கை மிகவும் சிக்கலான நேரத்தை கடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள நிலவரம் உங்களுக்கு கவலையளிப்பதாக இருக்கும். மிகவும் நெருங்கிய நண்பர் மற்றும் அண்டைநாடு என்ற முறையில், இந்தியா சார்பில், நிதி, உணவு, எரிபொருள், மருந்து, அத்தியாவசியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. பல்வேறு இந்திய நிறுவனங்கள், இலங்கையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும், மலையகத்தில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கும் தொடர்ந்து உதவி கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு பொருளாதார உதவி அளிக்க, சர்வதேச மன்றங்களில் ஹிந்தியாக குரல் கொடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதாரம், ஸ்திரத்தன்மையான ஜனநாயகம் மீண்டு வர, இந்தியா எப்போதும் துணை நிற்கும். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன் சென்றேன். அங்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான் தான். அப்போது, இந்திய அரசு சார்பில், இலங்கை தமிழர்களுக்கு, சுகாதாரம், கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தினோம். இவ்வாறு அவர் பேசினார்.பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் பரிசளிப்பு:

* அரசு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில், பிரதமரை, கவர்னர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில், பிரதமர் ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படை தளத்திற்கு சென்றார். அங்கு முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். பிரதமருக்கு முதல்வர் சால்வை அணிவித்து, சிலப்பதிகாரம் ஆங்கில மொழிபெயர்ப்பு நுாலை, முதல்வர் ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
கிராமிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு:* பிரதமர் பங்கேற்ற விழா, மாலை 5:45 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை 6:13 மணிக்கு துவங்கியது
* மேடைக்கு வந்ததும் பிரதமர் குனிந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்
* அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு சாவியை வழங்கியபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் முருகனை அருகில் வரவழைத்து வழங்கினார். சில பயனாளிகளுக்கு முதல்வர் கையால் சாவி வழங்கும்படி பிரதமர் கூற, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர்
* பிரதமர் பேச்சை, அகில இந்திய ரேடியோ நிகழ்ச்சி நிர்வாகி சுதர்சன் தமிழில் மொழி பெயர்த்தார்
* பிரதமர் தன் பேச்சை முடித்து புறப்படும்போதும், குனிந்து வணக்கம் தெரிவித்தார். பேச்சை முடிக்கும்போது, 'பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம்' எனப் பல முறை கூற, தொண்டர்களும் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்
* விழா முடிந்து பிரதமர் புறப்பட்டபோது, பா.ஜ., மாநில நிர்வாகிகள் வரிசையாக நின்று, அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்
* விழாவில், தமிழக அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்கள், தி.மு.க.,- எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர்
* அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் அதிகம் பேர் விழாவுக்கு வந்தனர். அவர் அரங்கிற்குள் வந்தபோதெல்லாம், அவர்கள் கோஷம் எழுப்பினர்
* பிரதமர் வந்த வழிநெடுகிலும், பா.ஜ.,வினர் திரளாக திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கிராமிய கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேனர், போஸ்டர் என திராவிட கட்சிகளுக்கு இணையாக, பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்
* மோடியும் காரில் மெதுவாக சென்றபடி, பா.ஜ.,வினர் மற்றும் பொது மக்களை பார்த்து மகிழ்ச்சி பொங்க கைகளை அசைத்தார். சிவானந்தா சாலை அருகே மாணவியர் பரதநாட்டியம் ஆடி மோடியை வரவேற்றனர். அவர்களை பார்த்த உற்சாகத்தில் மோடி காரில் இருந்து வெளியே வந்து கை அசைத்து வரவேற்பை ஏற்று கொண்டார்
* மத்திய அமைச்சர் முருகன் வரவேற்புரையாற்றியபோது, ஆங்கிலத்தில் தடுமாற, தி.மு.க.,வினர் சத்தம் எழுப்பினர். சில வினாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு பின் தொடர்ந்தார்.


பிரதமர் துவக்கிய 11 முக்கிய திட்டங்கள்:


* சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 598 கோடி ரூபாயில் மூன்றாவது ரயில்வே வழித்தட திட்டம்

* சென்னை கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ், 116 கோடி ரூபாயில், 1,152 வீடுகள் பணி முடிந்து பயனாளிகளிடம்
ஒப்படைத்தல்

* மதுரை - தேனி இடையே 506 கோடி ரூபாயில் அகல ரயில்வே வழித்தடம்

* எண்ணுார் - செங்கல்பட்டு இடையே 849 கோடி ரூபாயிலும்; திருவள்ளூர் - பெங்களூரு இடையே 911 கோடி ரூபாயிலும் குழாய் வழியே இயற்கை எரிவாயு எடுத்து செல்லும் திட்டங்கள் துவக்கப்பட்டன.


அடிக்கல் நாட்டிய திட்டங்கள்:


* சென்னை - பெங்களூரு இடையே 14 ஆயிரத்து 872.32 கோடி ரூபாயில் நான்கு வழி விரைவுச் சாலை

* சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 5,852 கோடி ரூபாயில், இரண்டடுக்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைத்தல்

* திருவள்ளூர் மாவட்டம் மப்பேடில், 1,428 கோடி ரூபாயில், பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா

* தர்மபுரி - பெங்களூரில் உள்ள நெரளூரு இடையே 3,871 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை; அரியலுார் மாவட்டம், மீன் சுருட்டி - கடலுார் மாவட்டம், சிதம்பரம் இடையே 724 கோடி ரூபாயில் இருவழிச்சாலை அமைத்தல்

* சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்கள், 1,803 கோடி ரூபாயில் மறு சீரமைத்தல் உட்பட, மொத்தம் 31 ஆயிரத்து 530 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.


இணையத்தை சூடாக்கிய 'வணக்கம் மோடி!'


* பிரதமர் மோடி நேற்று சென்னை வந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து, 'வணக்கம் மோடி, வெல்கம் மோடி' எனவும், எதிர்ப்பு தெரிவித்து, 'கோ பேக் மோடி' என்றும், சமூக வலைதளத்தில் வாசகங்கள் போட்டி போட்டு, இணையதளத்தை சூடாக்கின.

* நடிகையும், பா.ஜ., பிரமுகருமான குஷ்பு கூறுகையில், 'பிரதமர் மோடியின் வருகையால், சென்னை ஒரு பண்டிகையான சூழலுக்கு மாறிவிட்டது' எனக் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (31+ 44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivansakthi - dindugal,இந்தியா
27-மே-202221:34:09 IST Report Abuse
sivansakthi மோடி மோடி மோடி என்ற மந்திரம் தமிழ்நாட்டில் ஒழிக்கத் துவங்கி விட்டது. தாமரை மலர்ந்து விட்டது. அண்ணாமலை என்ற ஒருவர் ஊழலுக்கு எதிராக மற்றும் மக்களில் ஒருவராக திகழப் போகின்றார் என்பதே உண்மை. வாழ்க ஜனநாயகம் வளர்க தமிழ்நாடு
Rate this:
Cancel
maya - Junnagate,இந்தியா
27-மே-202220:27:19 IST Report Abuse
maya நமது பாரத பிரதமரை எந்த நிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்று தமிழகம் நினைக்கவில்லை எப்போதும் நினைக்காது ஆனால் தமிழகத்தின் சுயமரியாதை செயல்கள் பிரதமருக்கு அவமரியாதை என்று பாஜக நினைக்குமானால் , திருந்தி கொள்ளவேண்டியது பாஜக வே அன்றி தமிழகம் அல்ல . பன்னீர்செல்வமும் , எடப்பாடியும் மட்டுமே தமிழகம் அல்ல , ஸ்டாலினும்தான் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ? தமிழக முதல்வர் ஸ்டாலின் , மேற்கு வங்க முதல்வர் , மம்தா செய்ததை போல பிரதமரின் கூட்டத்தில் பாதியில் எழுந்து செல்லவில்லை . தெலுங்கானா முதல்வர் செய்ததை போல கூட்டத்திற்க்கே வராமல் இல்லை டெல்லி முதல்வர் செய்ததை போல , கொட்டாவி விட்டு எதிர்ப்பை தெரிவிக்க வில்லை பஞ்சாப் முதல்வர் போல் கூட்டத்தை ரத்து செய்து அனுப்பவில்லை கேரளா முதல்வர் செய்ததை போல , கூட்டத்திற்கு வரும் பாஜகவினரை கட்டுப்படுத்த வில்லை அவர்களின் மகிழ்ச்சிக்கு தடையும் போடவில்லை .
Rate this:
27-மே-202222:19:30 IST Report Abuse
ஆரூர் ரங்அவமானப் படுத்தி அனுப்பும் திட்டம் திமுக விடம் உண்டு. SQUARE ஊழலில் அமலாக்கத் துறை 🙄🙄ஆப்பு காத்திருக்கு. அப்புறம் வருந்திப் பலனில்லை...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-மே-202217:27:32 IST Report Abuse
Duruvesan மோடி அரசாங்கம் 8 வருஷத்தில் மூர்கன் குண்டு வைப்பதை கண்ட்ரோல் பண்ணிருக்கு,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X