கோவை:விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது:தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்று, சிறந்து விளங்கும், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், இரண்டு பயிற்சியாளர்கள், இரண்டு உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்தும் நடத்துனர் ஒருவர், ஒரு நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம், நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்துக்கு மேல் அளித்தவர்கள்), ஆட்ட நடுவர், நடுவர் மற்றும் நீதிபதி ஆகியோருக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக ரூ.1 லட்சம், தங்க பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, இவ்விருதுக்கு தமிழகத்தில், குறைந்தது மூன்று ஆண்டுகளாக வசிப்போர்இரண்டு முறை தமிழக அணிக்காகவும், இந்தியா சார்பாக சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்றவர்கள் தகுதி பெறுவர். இந்தியஅணியில் பங்கேற்று, தமிழகத்தில்பணிநிமித்தமாக குறைந்தது ஐந்து ஆண்டுகள் வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றம் இதர துறைகளில் பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருதுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஜூன் 10ம் தேதிக்குள், 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-3' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.