வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'முதல்வர் ஸ்டாலின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தியாவின் சாதாரண குடிமகனாகவும், பெருமை மிக்க தமிழனாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன். பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ., நிகழ்ச்சிக்கு வரவில்லை. பிரதமராக அரசு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தினார். ஆனால், 1974ம் ஆண்டு தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான், கச்சத்தீவு இலங்கைக்கு பரிசாக அளிக்கப்பட்டதை மறந்து விட்டார். திடீரென தற்போது விழிப்பு வந்தது ஏன்?
ஜி.எஸ்.டி., விவகாரத்தை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது. இழப்பீடு தொகை, ஜூலைக்கு பிறகுதான் வழங்கப்படும். இதில் எந்த பிரச்னையும் இல்லை.முதல்வர் கூட்டாட்சி குறித்து பேசினார். ஆனால், கூட்டாட்சிக்கு உதாரணமாக திகழும் ஜி.எஸ்.டி., கவுன்சிலை இழிவுபடுத்துகிறார். நிலுவைத்தொகை முறைப்படி வழங்கப்படுகிறது. முதல்வர், தன் விருப்பத்தை மட்டும் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த கருத்தின்படி முடிவுகள் எடுக்கப்படுவதை, அவர் புரிந்து கொள்ளவில்லை.ஜி.எஸ்.டி., வருவாய் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. தமிழகமும் பயனடைந்துள்ளது. தி.மு.க., உண்மையை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியல் செய்வதில் மட்டுமே ஆர்வம். பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மொழி மீது தனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தினார்.
பல இடங்களில், பல முறை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு முதல்வரிடம் பதில் இருக்காது என நம்புகிறேன். அவர், இவ்விஷயத்தில் அற்பத்தனமான அரசியல் மட்டுமே செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்து இரவு 8:05 மணிக்கு விமான நிலையம் சென்றார். அங்கு, அவரை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.அதேபோல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், பிரதமரை சந்தித்து பேசினர். அரசியல் பிரமுகர்கள் சந்தித்த நிலையில், மதுரை ஆதினம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளும், பிரதமரை சந்தித்து நீண்ட நேரம் பேசினார்.இந்த சந்திப்பு முடிந்து, இரவு 9:25 மணிக்கு, விமானத்தில் பிரதமர் டில்லி புறப்பட்டு சென்றார்.