வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்-ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, பாட்டியாலா சிறையில், உதவி 'குமாஸ்தா'வாக பணி வழங்கப்பட்டுள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
தீர்ப்பு
இந்த மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநில காங்., முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 58, கடந்த 1988ல், சாலையில் ஏற்பட்ட சண்டையில், குர்னாம் சிங், 65, என்பவரை முகத்தில் குத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குர்னாம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த வழக்கில், சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பஞ்சாபின் பாட்டியாலா சிறையில் சித்து அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, 241383 என்ற கைதி எண் வழங்கப்பட்டுள்ளது.பொதுவாக, சிறையில் கைதிகளின் திறமைக்கு ஏற்ப, ஏதாவது வேலை வழங்கப்படுவது வழக்கம். அவர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு, 40 - 60 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும்.
இந்த பணம், கைதிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக, 'டிபாசிட்' செய்யப்படுவது வழக்கம். இந்த வகையில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, சிறையில் உதவி குமாஸ்தா வேலை அளிக்கப்பட்டுஉள்ளது. சிறை கைதிகளின் நீதிமன்ற உத்தரவு பிரதிகள், சிறை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்கும் பணிக்கு உதவ அவர் பணியமர்த்தப்பட்டுஉள்ளார். பாதுகாப்பு கருதி, இந்த பணியை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 'லாக்கப்' அறைக்குள் இருந்தபடி, அவர் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
உடல்நலன்
மேலும், பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் சித்து பாதிக்கப்பட்டு இருப்பதால், கோதுமை, மைதா, சர்க்கரை கலந்த உணவுகளை அவரால் சாப்பிட முடியாது.நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் உள்ள உணவுகளை அவர் உட்கொள்ளக் கூடாது.எனவே, அவரது உடல்நலனை கருத்தில் வைத்து, சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் அளிக்க, நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, மூன்று வேளையும் சித்துவுக்கு சிறப்பு உணவுகள் வழங்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE