அ.தி.மு.க.வில் கடும் இழுபறிக்கு பின் ராஜ்யசபா வேட்பாளர்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. 'சீட்' கிடைக்காததால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த பல 'மாஜி'க்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஆறு ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் நான்கு பேர்; அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இருவர் வெற்றி பெற வாய்ப்புள்ளது.இரு பதவிகளுக்கும் தன் ஆதரவாளர்களை நியமிக்க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி திட்டமிட்டார்; அதற்கு பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேநேரம் தென் மாவட்ட பிரதிநிதிகள் ஒட்டு மொத்தமாக 'தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும்' என ஒருமித்த குரல் எழுப்ப பழனிசாமியால் ஒன்றும் செய்ய முடியாமல் பன்னீர்செல்வம் முடிவை ஏற்றார்.தென்மாவட்டத்துக்கு ஒரு எம்.பி. பதவி என முடிவானதும் அதை முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்க வேண்டும் என்ற குரல் எழும்பியது.
மற்றொரு எம்.பி. சீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார் சி.வி.சண்முகம் இடையே கடும் போட்டி நிலவியது.ஒரு வழியாக நேற்று முன்தினம் இரவு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் ஒன்றியச் செயலர் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இறுதி கட்ட தேர்வில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், ராஜ்சத்யன், திருநெருல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கணேசராஜா, மகளிர் அணியை சேர்ந்த கீர்த்திகா ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் 'தற்போது உங்களுக்கு வாய்ப்பு வழங்கினால் எம்.பி. தேர்தலில் உங்கள் மகனுக்கு வாய்ப்பு தர முடியாது. எம்.எல்.ஏ. தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது' என கட்சி தலைமை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அவர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அதனால் சி.வி.சண்முகம் பெயர் இறுதி செய்யப்பட்டது.
ராஜ்சத்யன் தந்தை எம்.எல்.ஏ.வாக உள்ளார். எனவே அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததால் அவரது பெயர் நீக்கப்பட்டது. இறுதியாக கீர்த்திகா பெயர் தேர்வு செய்யப்பட்டது. அப்போது அவர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உறவினர் என்ற புகார் எழுந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தும் என்றதால் அவருக்கு பதிலாக யாரும் எதிர்பாராத வகையில் தர்மர் பெயர் பரிந்துரைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதில் எம்.பி. பதவியை பெரிதும் எதிர்பார்த்த முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை உட்பட பல நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதுகுளத்துார்: ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்துார் ஒன்றிய தலைவர் தர்மர் 52, அறிவிக்கப்பட்டனர்.முதுகுளத்துார் அருகே புளியங்குடியை சேர்ந்த தர்மர் பி.ஏ., படித்துள்ளார். 1990 முதல் கிளை செயலாளர், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், 2014 --16 வரை மாவட்ட செயலாளர், 20 ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.தற்போது ஊரக வளர்ச்சி வங்கி தலைவர், முதுகுளத்துார் ஒன்றிய தலைவராக பதவி வகிக்கிறார். கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய செயலாளராக முதலில் ஆதரவு தெரிவித்தார். அவரது தீவிர ஆதரவாளர். எதிர்பார்க்கப்படாத நிலையில் தர்மருக்கு எம்.பி., வேட்பாளராக ஜாக்பாட் அடித்துள்ளது என கட்சியினர் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE