வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒலிம்பியா,-சமீபத்தில் அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, துப்பாக்கி உரிம கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க சில மாகாணங்கள் முடிவெடுத்துள்ளன. எனினும், குடியரசு கட்சி ஆளும் மாகாணங்களில் துப்பாக்கி உரிம கட்டுப்பாட்டிற்கு போதிய ஆதரவில்லாத நிலை உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் உவல்டி ஆரம்ப பள்ளியில் சமீபத்தில் ஒரு இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரு ஆசிரியர்கள் உட்பட, 19 பேர் உயிரிழந்தனர். அந்த இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆளும் வாஷிங்டன் மாகாணம் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை கவர்னர் ஜே இன்ஸ்லி 'டுவிட்டரில்' வெளியிட்டு உள்ளார்.
மேலும் பல மாகாணங்கள் இத்தகைய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.எனினும், குடியரசு கட்சி ஆளும் மாநிலங்களில் துப்பாக்கி உரிம கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க விரும்பாத நிலை உள்ளது. ஏனெனில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பு தொழிலில் குடியரசு கட்சியினர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்தை குடியரசு கட்சி ஆளும் சில மாநிலங்கள் எதிர்க்கின்றன. அர்கன்சாஸ், பென்சில்வேனியா போன்ற சில மாநிலங்கள் துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. இதில் புளோரிடா மாகாணம் விதி விலக்காக உள்ளது. அங்கு, 2018ல் துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்கள் இறந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவு பெற்று துப்பாக்கியை பறிமுதல் செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சி ஆளும் சில மாநிலங்களிலும் துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஆதரவில்லாத நிலை உள்ளது.