உடுமலை:நகரில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தியதன் நோக்கம் நிறைவேற, கூடுதல் கழிவு நீர் அகற்றும் வாகனம் ஒதுக்கீடு, ஆன்லைன் வாயிலாக சுத்திகரிப்பு பணிகள் கண்காணிப்பு செய்வது அவசியமாகியுள்ளது.
உடுமலை நகராட்சி, 33 வார்டுகள், 7.41 சதுர கி.மீ., பரப்பளவையும், 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டதாகும். நகராட்சியில், பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
96.96 கி.மீ., நீளம் பாதாள சாக்கடை குழாய்கள், 3,900 ஆள் இறங்கும் குழிகள் மற்றும் வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என, 16,500 பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கவும், கழிவு நீரை சுத்திகரிக்க, 7.81 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு மையமும் அமைக்கப்பட்டது.திட்ட வடிவமைப்பு குளறுபடியால், திட்டத்தை செயல்படுத்திய, குடிநீர் வாரியத்திடமிருந்து, நகராட்சி வசம் ஒப்படைப்பது இழுபறியாகி வந்தது.
நீண்ட இழுபறிக்கு பின், கடந்தாண்டு நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.சுத்திகரிப்பு மையத்திற்கு தினமும், 3.8 எம்.எல்.டி., முதல் 4 எம்.எல்.டி., வரை தற்போது கழிவு நீர் வருகிறது. தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து முதல்நிலை சுத்திகரிப்பு தொட்டிக்கு வருகிறது. தொடர்ந்து, காற்றோட்ட தொட்டிக்கு வந்து, பாக்டீரியா வழியாக சுத்தம் செய்யப்பட்டு, குளோரின் வாயு செலுத்தப்பட்டு, பின்னர் வெளியேற்றப்படுகிறது.இயந்திரங்கள் பழுது, புளோயிங் இயந்திரம் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சுத்திகரிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாமல், கழிவு நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
ஆன்-லைன் கண்காணிப்பு
கழிவு நீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு மையத்திற்கு வரும், கழிவு நீரின் அளவு, ஒவ்வொரு நிலை சுத்திகரிப்பு பணி மற்றும் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு, உள்ளே வரும் போது, கழிவு நீரில் உள்ள டி.டி.எஸ்., அளவு, வெளியேறும் நீரின் அளவு மற்றும் சேகரிக்கப்பட்டுள்ள திடக்கழிவு (ஸ்லெட்ஜ்) என அனைத்து விபரங்களும் ஆன்-லைன் வழியாக, நகராட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும், மெயில் வழியாக அனைத்து தகவல்களும் சென்று சேரும் வகையிலும் உயர் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் ஆவணமாக பதிவாகும் வகையில், பாதாள சாக்கடை திட்ட மையங்களில், ஆன்-லைன் மீட்டர் உள்ளிட்ட கட்டமைப்புகள் மேம்படுத்த வேண்டும்.
ஆனால், 5 ஆண்டாகியும், நவீன வசதிகளும் சுத்திகரிப்பு மையம் மேம்படுத்தப்பட வில்லை. இதனால், கழிவு நீர் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றுவது, துர்நாற்றம், சுகாதார கேடு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் அனைத்து நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும், ஏறத்தாழ, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இத்திட்டம், மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.எனவே, உடுமலை, நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திலும், ஆன்-லைன் கண்காணிப்பு கட்டமைப்பை அமல்படுத்த வேண்டும்.
வாகனம் பற்றாக்குறை
திட்ட குழாய் அமைத்தது, ஆளிறங்கும் குழி அமைத்தது உள்ளிட்ட பல்வேறு திட்ட குளறுபடி, பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால், அடிக்கடி, பிரதான ரோடுகள், நகராட்சி ரோடுகள் மற்றும் வீடுகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் ஆளிறங்கும் குழி வழியாக வெளியேறுவது, உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.
தினமும், 20க்கும் மேற்பட்ட குழாய் அடைப்பு புகார்கள் வந்தாலும், கழிவு நீர் அகற்றும் வாகனம் ஒன்று மட்டுமே உள்ளது. 33 வார்டுகளுக்கும் ஒரே வாகனம் என்பதால், அடைப்பு நீக்கும் பணி தாமதம் ஏற்படுகிறது.நவீன இயந்திரம் வந்துள்ள நிலையில்,அதனை எடுத்துச்சென்று, நிறுவி பயன்படுத்த, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
எனவே, கூடுதலாக ஒரு கழிவு நீர் அகற்றும் வாகனம் வாங்க வேண்டும்.எனவே, பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து மேம்படுத்தவும், கழிவு நீர் முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.குழாய் அடைப்புகள் உடனடியாக நீக்கவும், ஆளிறங்கும் குழிகள், மூடிகள் ஆகியவை உடைந்துள்ளவற்றை புதுப்பிக்க வேண்டும்.இப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, பாதாளச்சாக்கடை திட்டத்தை செயல்படுத்தியதன் உண்மையான நோக்கம் நிறைவேறும்.