முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: ஆண்களுக்கு நிகராக பெண்களும், மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற, நல்ல நோக்கத்தில் தான் பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனால், பல மாநகராட்சிகள், நகராட்சிகளில் பெண்கள் மேயராகவும், நகராட்சி தலைவராகவும் உள்ளனர். அதே போல, பெண் கவுன்சிலர்களும் நிறைய பேர் உள்ளனர்.
ஆனால், இந்த கவுன்சிலர்களின் கணவர்கள், தங்கள் மனைவியரை ஓரம்கட்டி, தாங்களே நிர்வாகத்திலும் தலையிடுகின்றனர். பல மாநகராட்சி, நகராட்சிகளில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆதிக்கத்தை விட, இவர்களின் ஆதிக்கம் தான் கொடி கட்டிப் பறக்கிறது. பெண் கவுன்சிலர்களும், 'எல்லாத்தையும் அவர்கள் பார்த்துக் கொள்வர்' என்று விட்டு விட்டு, 'ஹாயாக' இருக்கின்றனர்.
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்ற பாரதியின் கனவை நனவாக்குவர் இந்த பெண்கள் என்று தான், 50 சதவீதம் ஒதுக்கினர். ஆனால், பல மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடப்பது என்ன... இவர்களை, 'டம்மி'யாக்கி, நிர்வாகத்தில் தலையிடுகின்றனர், இவர்களின் கணவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்; அரசும் இதை கண்டும் காணாமல் இருக்கிறது.
நிர்வாக திறமை இல்லாத, இந்த பெண்களின் பதவியை பறித்து விட்டு, திறமையும், தகுதியும் உள்ள வேறு பெண்களுக்கு இந்த பதவி தரப்படுமாயின், அரசின் பெண்களை முன்னேற்றும் திட்டம் நிறைவேறும். பொறுப்பில்லாமல் தங்கள் பதவியை வேறொருவருக்கு, அவர் தொட்டுத் தாலி கட்டிய கணவனே ஆனாலும், கைமாற்றி விடும் அவலம் குறையும்.
பொறுப்பான பதவியில் இருக்கும், வெள்ளந்தியான பெண்களின் கணவர்களுக்கும், இது ஒரு பாடமாக அமையும். 'காதலனின் காரியத்தில் தான் காதலி கைகொடுக்க வேண்டும்' என்றான் பாரதி. இப்படி அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும், பெண்களின் அரசு காரியத்தில் கை வைக்கச் சொல்லவில்லை.'உனக்கு அறிவு கம்மி... நீ தள்ளு; நான், உன் வேலையை பார்க்கிறேன்' என்று சொல்லி, பெண்களின் பெரிய அரசு பணியை, ஆண்கள் எடுத்துச் செய்வது உபகாரம் ஆகாது. அது, ஆணாதிக்க சமுதாயத்தில், ஆண்களை மீறி பெண்கள் எதுவும் செய்து விட முடியாது. அது, விக்டோரியா மகாராணி ஆனாலும் சரி... வில்லேஜ் மனோன்மணி ஆனாலும் சரி என்பதையே அம்பலப்படுத்தும்.
பெண்மை வாழ்க என்று கூத்திடுவது ஒருபுறம்; பெண்ணை வைத்து கூத்திடுவது மறுபுறம் என்பது தான், தற்போது அரங்கேறி கொண்டிருக்கிறது. மாதர் தம்மை இழிவு செய்யும் இந்த நிலைமை மாற, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE