கோவை: கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, பொதுமக்களின் ஆட்சேபனைகளை நிராகரித்து, கோவை மாமன்ற கூட்டத்தில், சொத்து வரி உயர்த்துவது தொடர்பான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு உத்தரவுப்படி, கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு, ஏப்., 13ல் வெளியிடப்பட்டு, 30 நாட்களுக்குள் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்க, பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பெறப்பட்ட, 38 ஆட்சேபனைகளும், கவுன்சிலர்களின் விவாதத்துக்கு நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் விவாதத்துக்கு வைக்கப்பட்டது.

காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் பேசுகையில், ''சொத்து வரியை உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றினால், நமது மன்றத்துக்கு கருப்பு நாளாக அமையும். தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த வரி உயர்வை கட்ட முடியாது; மக்கள் கட்ட மாட்டார்கள்,'' என்றார்.
ம.தி.மு.க., கவுன்சிலர் தர்மராஜ் பேசுகையில், ''மக்களிடம் எதிர்மறையான கருத்து ஏற்படும். வரி உயர்வு அவசியம் என்றால், 50 சதவீதமாக உயர்த்தலாம்,'' என்றார்.
காங்கிரஸ் கவுன்சில் குழு தலைவர் அழகு ஜெயபாலன் பேசுகையில், ''அனைத்து கட்சி மாநில நிர்வாகிகள் மூலமாக, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, மக்கள் பாதிக்கும் விஷயத்தை வலியுறுத்த வேண்டும். அதனால், தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.
மா.கம்யூ., கவுன்சிலர் ராமமூர்த்தி பேசுகையில், ''2008ல் வரி உயர்த்தியபோது, எத்தனை சதவீதம் என்பதை மன்ற முடிவுக்கு விடப்பட்டது.பொருளாதார மதிப்பு தோராயமாக உயர்ந்திருப்பதாக தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அரசாணை நகல் மன்றத்துக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்; கொடுக்காதது தவறு. நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு வரி உயர்வு செய்ய வேண்டும். இப்போது ஒத்திவைத்து, விவாதித்து முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.

இ.கம்யூ., கவுன்சிலர் சாந்தி பேசுகையில், ''சொத்து வரி உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும். வாடகையை உடனடியாக உயர்த்தி விடுவார்கள். தி.மு.க.. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இப்போது, 40 எம்.பி.,க்கள் இருக்கின்றனர்; 4 எம்.பி., கூட ஜெயிக்க முடியாமல் போய் விடும். தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்,'' என்றார்.
ஆனால், மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, மேயர் கல்பனா அறிவித்தார். கவுன்சிலர்களின் மாற்று கருத்துகளை, பதிவு மட்டும் செய்வதாக அறிவிக்கப்பட்டது. பொதுமக்களின் ஆட்சேபனைகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டன.
தர்ணா
மன்றத்தில் மூன்று அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் இருக்கின்றனர். இதில், 47வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன், இரு கூட்டங்களுக்கு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருக்கிறார். இருந்தாலும் மன்றத்துக்கு வந்திருந்த அவரும், 90வது வார்டு கவுன்சிலர் ரமேசும், விக்டோரியா ஹால் வெளியே, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 38வது வார்டு கவுன்சிலர் ஷர்மிளா வரவில்லை.
அனைத்து தரப்பு கட்டடங்களுக்கும், 25 முதல், 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இப்போது தான் மக்கள் மீண்டு வந்துள்ளார்கள். மக்கள் மீது வரி உயர்வு திணிப்பாக இருப்பதால், நிறுத்தி வைக்க வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி: தமிழக அரசு அறிவித்துள்ள அபரிமிதமான சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.மா.கம்யூ.,: நகர்ப்புறங்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். வரி உயர்வு அவர்களை நேரடியாக பாதிக்கும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இ.கம்யூ.,: கொரோனா தொற்று பரவல் முழுமையாக ஒழிந்து விட்டது என கூற இயலாது. தொழில் நிறுவனங்கள் உற்பத்தி திறனை முழுமையாக அடைய முடியவில்லை. மூடப்பட்ட பல குறு, சிறு தொழில் நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. சொத்து வரி உயர்வு, வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி, வாடகைக்கு வசிப்போரையும் பாதிக்கும். சொத்து வரியை ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் உயர்த்துவது ஏற்கத்தக்கதல்ல. கோவையில், 1993 முதல் சதுரடி கணக்கில் வரி மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், 2008 முதல் சொத்து வரி சீராய்வு செய்யப்படவில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் சொத்து வரி, காலியிட வரி உயர்த்த முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்திய தொழில் வர்த்தக சபை: 600 சதுரடி வரை - 20 சதவீதம், 601 முதல், 1,200 சதுரடி வரை - 40 சதவீதம், 1,200 சதுரடிக்கு மேல் - 60 சதவீதம், தொழிற்சாலைகளுக்கு - 30 சதவீதம், வணிக கட்டடங்களுக்கு - 40 சதவீதம் என வரி சீராய்வு செய்யலாம்.
தமிழக வியாபாரிகள் சம்மேளனம்: வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு, 100 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக குறைக்க வேண்டும்.
குணசேகரன், பி.என்.புதுார்: தொழில்துறையினருக்கு உதவியாக இல்லாமல், சொத்து வரி உயர்வு செய்து, கட்டட உரிமையாளர்களிடம் பணத்தை உறிஞ்சுவது மனித தன்மையற்ற செயல். வரி உயர்வை தள்ளி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
ராஜேந்திரன், துடியலுார்: சொத்து வரியை 20 சதவீதம், காலியிட வரியை, 10 சதவீதம் உயர்வு செய்யும் வகையில் பரிசீலனை செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE