சென்னை: தி.மு.க.,வின் இரு ஊழல் பட்டியலை ஜூன் மாதம் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமலை கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: தமிழக மக்களுக்கு நேற்றைய நாள் சரித்திர நாள். தமிழக மக்களின் வரவேற்பு பிரதமரை நெகிழ செய்தது. பிரதமர் வருகைக்காக கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ் கலாசாரத்தை தோளில் தூக்கி மண்ணை நேசித்து பிரதமர் பேசினார்.
பிரதமரின் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது. நேரு உள் விளையாட்டரங்க நிகழ்ச்சியில் தமிழை உயர்த்தி பிடித்திருக்கிறார் பிரதமர். சமூக நீதி பற்றி பிரதமர் இருந்த மேடையில் முதல்வர் பேசியது எள்ளி நகையாட வேண்டிய விஷயம் தான். எல்.முருகன், பிரதமர் அருகில் மேடையில் அமர்ந்திருந்தார். இதுவே சமூக நீதி.

கட்டாயமாக்கப்படவில்லை
இந்தியாவிலேயே தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் அறிவுதிறன் குறைவாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து கல்வியை அழித்ததற்கான பட்டத்தை திமுக.,வுக்கு தான் தர வேண்டும். தாய்மொழியான தமிழில் படிப்பதை திமுக அரசு கட்டாயமாக்கவில்லை. புதிய தேசிய கொள்கை மூலம் அதை கட்டாயமாக்கியவர் பிரதமர். ரயில் வராத தண்டவாளத்தில் தலையை வைத்துவிட்டு தமிழ்மொழியை காப்பது போல் முதல்வர் பேசுகிறார்.
ஊழல் பட்டியல்
பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு கணக்குப்பிள்ளை கணக்கு கேட்பது போல் முதல்வர் பேசியிருக்கிறார் . நாங்கள் யார் மீதும் கைவைக்க மாட்டோம். ஆனால், வந்த சண்டையை விட மாட்டோம். ஜூன் முதல் வாரத்தில் தி.மு.க., அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம்.
ஆடியோ கேட்கவில்லை
தமிழக மக்கள் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எண்ணற்ற அன்பு வைத்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் நிகழ்வுகளில் ஆடியோ கேட்பதில்லை. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் விட்டுவிட்டார்.
சராசரி நடிகர்
உதயநிதி அளவுக்கு நான் நல்ல நடிகர் அல்ல. சராசரியான நடிகர் தான். கர்நாடகாவில் நீச்சல் வீரர் ஒருவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஒரே ஒரு படத்தில், ஒரே ஒரு சீன் நடித்துள்ளேன். அவ்வளவு தான் . நான் நடித்தால், என் படத்துக்கு நானே டிக்கெட் வாங்கி நானே தான் படம் பார்க்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE