வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் மிகவும் உற்சாகமாக பேசியுள்ளார். 'வரும் 2024 லோக்சபா தேர்தல் வெற்றி மட்டுமே இலக்காக இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார்.
தன்னை வரவேற்கவும், வழியனுப்பவும் வந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம் உள்ளிட்டோரிடம், பிரதமர் மோடி உற்சாகமாக பேசியுள்ளார். வழக்கமாக கட்சி நிர்வாகிகள், பழக்கமானவர்களை சந்திக்கும் போது, நகைச்சுவையுடன் ஏதாவது கேள்வி கேட்பது மோடியின் வழக்கம்.
சென்னை வருகையின் போது, மாநில செயலரான சூர்யா, நிர்வாகிகளில் இளையவர். விமான நிலையத்தில் அவரை பார்த்ததும், சிறிது நேரம் பேசியுள்ளார். அப்போது, 'சூர்யாவை வருங்காலத்தில் சிறந்த தலைவராக்குவோம்' என, மோடியிடம் அண்ணாமலை கூறியுள்ளார். இப்படி, ஒவ்வொரு நிர்வாகியிடமும் நெருக்கம் காட்டி மோடி பேசியது, பா.ஜ.,வினரை உற்சாகப்படுத்தி உள்ளது.

அண்ணாமலை, கேசவ விநாயகம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரிடம் சிறிது நேரம் தனியாக பேசிய மோடியிடம், அரசு விழாவில் தி.மு.க.,வினரை குவித்து, கட்சி மேடையாக்கி விட்டது பற்றியும், மத்திய அரசுடன் மோதல் போக்கை உறுதிப்படுத்துவது போல முதல்வர் ஸ்டாலின் பேசியது பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு சிரித்துக் கொண்டே, '2024 லோக்சபா தேர்தல் தான், நம் இலக்காக இருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து குறைந்தது, ஐந்து எம்.பி.,க்களாவது பா.ஜ., சார்பில் வெல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, தி.மு.க., - காங்கிரஸ் அணி இரட்டை இலக்கத்தை தாண்ட முடியாத அளவுக்கு, நம் வியூகமும், பணிகளும் இருக்க வேண்டும்' என மோடி கூறியதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., அரசை கண்டித்து, இதுவரை நடத்திய போராட்டங்கள், அதற்கு கிடைத்த வெற்றி குறித்து, மோடியிடம் எடுத்துரைத்த அண்ணாமலை, இனி, திமு.க., அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கூறியுள்ளார். அதற்கு சிரித்துக் கொண்டே, அண்ணமலையை தட்டிக் கொடுத்ததாக, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE