மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி:
மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ள தண்ணீர், கடைமடை பகுதி வரை போய் சேருமா என்பது கேள்விக்குறி தான். பல பகுதிகளில் துார்வாரும் பணிகளை இன்னும் முடிக்கவில்லை. போர்க்கால அடிப்படையில், துார்வாரும் பணியை முடிக்க வேண்டும்.
* சட்டுபுட்டுன்னு தண்ணியை தொறந்து விட்டாதானே, துார்வாரிய கணக்கில் சில கோடிகளை, 'தேத்த' முடியும் என்ற பேருண்மை தங்களுக்கு தெரியாதா?***
பா.ஜ., மாநிலச் செயலர் அஸ்வத்தாமன் பேட்டி
:
தமிழகத்தில் தற்போது மின் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க., அரசு குறைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் விவகாரத்தில், மக்களிடம் நயவஞ்சக நாடகம் ஆடி ஏமாற்றி வருகிறது. அது மட்டுமின்றி, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு, ஆங்காங்கே கொலை, கொள்ளைகள் தொடர்கின்றன
.* மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது என்றால், மத்திய அரசு தானே கேள்வி கேட்கணும்... அதுக்கான முயற்சிகளை நீங்க எடுக்கலாமே!
தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பேட்டி:
'ராஜிவ் தியாகியா' என்ற கேள்வியை சீமான் கேட்கிறார். அவர், ராஜிவ் பற்றி பேச தகுதி அற்றவர். மோதிலால் நேரு ஐந்து ஆண்டும், நேரு, 11 ஆண்டும் சிறை வாசம் அனுபவித்தனர். அப்படிப்பட்ட தியாகத் தலைவர்களின் வாரிசான ராஜிவ், தியாகி இல்லாமல், வேறு யார் தியாகி என்பதை சீமான் விளக்க வேண்டும்.
* சீமான் போன்றவர்கள், தியாகியா கொண்டாடப்படுறவங்க எல்லாம், நம்ம நாட்டில் இல்லை!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
தமிழகம் முழுதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், தி.மு.க., அரசு இழுத்தடித்து வருவது சரியானதல்ல. இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு அதன்படி செயல்படாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணம் காட்டி, காலம் தாழ்த்தி வருகிறது.*
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசுக்கு, கூடுதல் சுமை என்பதால், உச்ச நீதிமன்றம் பக்கம் கைகாட்டுகிறதோ?
பா.ஜ., மாநில பொதுச் செயலர் சீனிவாசன் பேட்டி:
தி.மு.க.,வில் அந்தந்த மாவட்ட செயலர்கள், தங்கள் தந்தை, மகன் படங்களோடும், அமைச்சர்கள் தங்களது மகன்களின் படங்களோடும் போஸ்டர் ஒட்டுகின்றனர். தமிழகம் முழுதுமே முதல்வர் ஸ்டாலின் படத்தோடு, உதயநிதி படத்தையும் போடுகின்றனர்.*
அவங்க அரசியல் பாரம்பரியம் அப்படி... எல்லா கட்சிகளும், பா.ஜ.,வை போல இருந்துட்டா, பிறகு உங்களுக்கும் மதிப்பு இருக்காதே!