வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற மேடையில், 'உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என, முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு, காங்கிரஸ் கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், நேற்று(மே 26) நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்திற்கு, 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவிற்கு முன்னிலை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். தமிழக திட்டங்களுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். அதுவே உண்மையான கூட்டாட்சியாக அமையும்' என்றார்.

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், இதுவரை எந்த ஒரு முதல்வரும், கோரிக்கையை முன்வைத்தும், அரசியல் பொடி வைத்தும் பேசவில்லை. முதல்வர் ஸ்டாலின், தன் பேச்சில் கூட்டாட்சி தத்துவத்திற்கு அரசியல் ரீதியாக விளக்கம் அளிக்கும் வகையில், தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தது, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதேநேரத்தில், முதல்வரின் பேச்சு, தமிழக பா.ஜ.,வுக்கு எரிச்சலை அளித்துள்ளது. அதன் விபரம்:
* தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி:
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி மேடையிலேயே, மத்திய அரசின் நிதி ஆதாரங்களுக்கு, தமிழகம் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு ஆற்றி வருவதை புள்ளிவிபரங்களோடு எடுத்துரைத்தது, முதல்வரின் அரசியல் பேராண்மையும், துணிவையும் வெளிப்படுத்தி உள்ளது.
* தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
பிரதமரை மேடையில் அமர வைத்து, முதல்வர் அரசியல் செய்துள்ளார். அவரது மோசமான நடத்தையால், நான் வெட்கப்படுகிறேன். கச்சத்தீவு பற்றி பேசியுள்ளார். 1974ல் இந்திராவால் இலங்கைக்கு அந்த தீவு பரிசாக வழங்கப்பட்டதை, முதல்வர் மறந்து விட்டார்.
கடந்த ஓராண்டில், ஜி.எஸ்.டி., வருவாய் கணிசமாக அதிகரித்து, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பயனடைகின்றன. கூட்டாட்சி முறையை பற்றி தொடர்ந்து பேசுகிறார். ஆனால், ஜி.எஸ்.டி., கவுன்சிலை அவமதிக்கிறார்; இது தான் கூட்டாட்சியின் எடுத்துக்காட்டா?
கூட்டாக உருவாக்கப்பட்ட சூத்திரத்தின்படி நிலுவைத் தொகை செலுத்தப்படுகிறது. முதல்வர் அவரது விருப்பங்கள் மட்டுமே முக்கியம் என, நினைக்கிறார். தி.மு.க., எப்போதாவது உண்மைகளை கவனிக்கிறதா? அவர்களுக்கு அரசியலில் மட்டுமே ஆர்வம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், பிரதமர் முன்னிலையில், 'உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என, முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதை, காங்கிரசில் உள்ள தி.மு.க., எதிர்ப்பாளர்கள் ஏற்கவில்லை.அவசர நிலை பிரகடனத்தின் போது, தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டு, பின் நடந்த தேர்தலில், காங்கிரசுடன் தி.மு.க., உறவு வைத்து. அப்போது, 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என, கருணாநிதி புகழாராம் சூட்டி வரவேற்றார்.

அதேபோல், மத்திய அரசை ஆதரிக்கும் வகையில், 'உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என, கருணாநிதி கூறினார். தற்போது, அதே வசனத்தை ஸ்டாலின் பேசியுள்ளதால், எதிர்காலத்தில் என்ன முடிவு வேண்டுமானாலும், தி.மு.க., எடுக்கலாம் என, காங்கிரசில் உள்ள தி.மு.க., எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE