மாமல்லபுரம் : பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை, அதே பகுதியிலே தரத்துடன் பதப்படுத்த, கல்பாக்கம் அடுத்த நத்தம் பகுதியில், 5,000 லிட்டர் கொள்ளளவு குளிரூட்டும் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையம் செயல்படுவதால், பால் கெடுவது, போக்குவரத்து செலவு உள்ளிட்ட சிக்கல் தீரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில் விவசாயத்தைபோலவே, கால்நடை விவசாயமும் பிரதானமாக விளங்குகிறது.பசு, எருமை மாடுகள் வளர்ப்பின் வாயிலாக, பால் உற்பத்தியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வாழ்வாதார தொழிலாக இது விளங்குகிறது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகளின் பால் உற்பத்தியாளர்களுக்காக, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சென்னை அயனாவரத்தில் இயங்குகிறது.
இதன்கீழ், ஒவ்வொரு கிராமப் பகுதியிலும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும், 300 - 500 பேர் சங்க உறுப்பினர்களாக உள்ளனர்.அவர்கள், தினமும் காலை, மாலை என, பல்லாயிரம் லிட்டர் பசு, எருமை பாலை, சங்க நிர்வாகத்திற்கு வழங்குகின்றனர். கொள்முதல் செய்யப்படும் பால், சரக நிர்வாகத்திற்கு அனுப்பப்படும்.திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிகளில், நத்தம், வெங்கப்பாக்கம், குன்னத்துார், கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் உள்ளிட்ட 24 பகுதிகளில், இச்சங்கம் செயல்படுகிறது.
இப்பகுதியினரிடம் கொள்முதலாகும் பால், அச்சிறுப்பாக்கம் அடுத்த, சானுார் பகுதி பால் சேகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி, அங்கிருந்தே சென்னை பகுதிக்கு அனுப்பப்பட்டது.திருக்கழுக்குன்றத்தில் இருந்து சானுார் பகுதி தொலைவில் உள்ளதால் பால் அனுப்ப தாமதம், பால் கெடுவது, போக்குவரத்து செலவு உள்ளிட்ட சிக்கல் இருந்தது.
இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, கல்பாக்கம் அடுத்த நத்தம் பகுதியில், பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க, பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.பால் உற்பத்தியாளர்களின் ஒன்றிய துணைத் தலைவர், நத்தம் பகுதி ஏழுமலை, இதுகுறித்து நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.தொடர்ந்து, ஒன்றிய நிர்வாகம், கடந்த ஆண்டு, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், 5,000 லிட்டர் கொள்ளளவு குளிரூட்டும் நிலையத்தை, நத்தம் பகுதியில் அமைத்தது.இயந்திர சாதனங்களை முறையாக பொருத்தாதது, மின் இணைப்பு பெறாததால், இந்நிலையம் செயல்படாமல், எட்டு மாதங்களாக தாமதமானது.
இதையறிந்த, பால்வள அமைச்சர் நாசர், நிலைய பணிகளை முடித்து, விரைந்து துவக்க அறிவுறுத்தினார். இப்பணிகள் தற்போது முழுமையடைந்து, சமீபத்தில் துவக்கப்பட்டது.ஒன்றிய பொது மேலாளர் ஜெயக்குமார், இணை பதிவாளர் சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருக்கழுக்குன்றம் சுற்றுப்புற பகுதிகளில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில், பால் கொள்முதல் செய்து, தொலைவில் உள்ள சானுார் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
பால் கெடுவது, போக்குவரத்து செலவு ஆகிய இழப்புகள் அதிகம். இங்கேயே பாலை குளிரூட்டி அனுப்ப, ஒன்றிய நிர்வாகம், தற்போது பால் குளிரூட்டும் நிலையம் துவக்கியுள்ளது. இங்கிருந்து சென்னை பகுதிக்கு தினமும், டேங்கர் லாரியில் பால் அனுப்பப்படும். குளிரூட்டும் நிலைய பகுதியில், லாரி செல்ல, திரும்ப சாலை வசதி போதுமானதாக இல்லை. சாலையை விரிவுபடுத்தி மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.ஏழுமலை,துணைத் தலைவர், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE