சென்னை: 'மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், தாலுகா அலுவலக செயல்பாடுகளை ஆய்வு செய்து, குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்' என, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

பிரச்னைகள்
அனைத்து மாவட்டங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு எழுதிஉள்ள கடிதம்:மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, வருவாய் நிர்வாகம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறது.பட்டா மாற்றம், நிலம் உட்பிரிவு, பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் போன்றவை, தாலுகா அலுவலகம் வழியே செயல்படுத்தப்படுகின்றன.

ஆனால், மக்களுக்கு சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. முதல்வர் சமீபத்தில், சென்னை கிண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது, பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தது. எனவே, கண்காணிப்பு அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில், தாலுகா அலுவலகப் பணிகளை, விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் ஆகியவை கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
சான்றிதழ்களை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருந்தால், நிராகரிப்புக்கான காரணம் சரியா என்று, பார்க்க வேண்டும்.நிலுவைமுதியோர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் சிலவற்றை தேர்வு செய்து, காரணம் உண்மையா என ஆய்வு செய்ய வேண்டும்.பட்டா மாற்றம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால், அதற்கான காரணத்தை கேட்டறிய வேண்டும்.
பட்டா மாற்றம் செய்வதில் அதிக தாமதம் ஏற்படுகிறது. உட்பிரிவு தேவைப்படாத விண்ணப்பங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுத்து, பட்டா வழங்க வேண்டும்.ஆய்வு குறித்த விபரங்களை, வருவாய் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.