நீட் எழுத விண்ணப்பித்தவர்கள் 1.42 லட்சம் பேர்; ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு| Dinamalar

'நீட்' எழுத விண்ணப்பித்தவர்கள் 1.42 லட்சம் பேர்; ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

Updated : மே 29, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (9) | |
சென்னை : மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தமிழகத்தில் 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் பேர் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு, 'நீட்' தேர்வு எழுத விரும்பும் மாணவ - மாணவியர் அதிகரித்து வருகின்றனர்.மருத்துவ படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான 'நீட்' தேர்ச்சி பெற வேண்டியது
NEET, NEET exam, Medical Entrance, நீட், விண்ணப்பம், 1.42 லட்சம் பேர், ஆண்டுக்கு ஆண்டு, அதிகரிப்பு

சென்னை : மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தமிழகத்தில் 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் பேர் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு, 'நீட்' தேர்வு எழுத விரும்பும் மாணவ - மாணவியர் அதிகரித்து வருகின்றனர்.

மருத்துவ படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான 'நீட்' தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நாடு முழுதும் நடக்கிறது. இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கி, மே 20ல் முடிந்தது.


இட ஒதுக்கீடுதேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு தேர்வு எழுத, நாடு முழுதும் இருந்து, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 10.64 லட்சம் பேர் மாணவியர். மேலும், 12 மூன்றாம் பாலினத்தவரும், 8.07 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுத முன்வந்துள்ளனர். அதோடு, 771 வெளிநாட்டினர், 910 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் 647 இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரும் விண்ணப்பித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பிரிவில், 1.29 லட்சம்; இட ஒதுக்கீடு அல்லாத பொது பிரிவில், 5.68 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 7.86 லட்சம்; பட்டியலினத்தவர்,2.67 லட்சம்; பழங்குடியினர், 1.13 லட்சம் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 6,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


6 மாநிலங்களில் அதிகம்

நாட்டில் அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில்,2.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
உ.பி.,யில், 2.10 லட்சம்; கர்நாடகா, 1.30; கேரளா, 1.20; ராஜஸ்தான், 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.மொத்த விண்ணப்பங்களில், தமிழகம் உட்பட மேற்கண்ட ஆறு மாநிலங்களின் பங்கு, 55 சதவீதம்.கடந்த ஆண்டு தமிழகத்தில், 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 1.08 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு, 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் அதிகம்.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மட்டும், 13 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டில், 12 ஆயிரம் பேர் என்றிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக, 1,500 பேர் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்.


ஆண்டுதோறும் அதிகரிப்பு

ஐந்து ஆண்டுகளாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது, 2017ல், 11.4 லட்சமாக இருந்த எண்ணிக்கை, ஐந்து ஆண்டு களில் படிப்படியாக உயர்ந்து, இந்த ஆண்டு, 18.72 லட்சமாக உயர்ந்துள்ளது.கடந்த 2018ம் ஆண்டு, 13.23 லட்சம்; 2019ல், 15.19 லட்சம்; 2020ல், 16 லட்சம் மற்றும் 2021ல், 16.14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 2.58 லட்சம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களில், 15.44 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 8.70 லட்சம் பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றனர்.இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுடன், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரவும், நீட் தேர்வு கட்டாயம். நாடு முழுதும் மொத்தம், 91 ஆயிரம்எம்.பி.பி.எஸ்., இடங்கள், 27 ஆயிரம் பி.டி.எஸ்., எனும் பல் மருத்துவம் படிப்பு இடங்கள் மற்றும் 51 ஆயிரம் 'ஆயுஷ்' படிப்பு இடங்களுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

தமிழ் வழியில் ஆர்வம்!

மொத்தம், 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பெரும்பாலானோர், ஆங்கில வழியில் தேர்வு எழுத உள்ளனர். இரண்டாவதாக, ஹிந்தி மொழியில் தேர்வு எழுத, 2.5 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத, 32 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, 20 ஆயிரம் பேர் தமிழ் வழியில் தேர்வு எழுத முன்வந்த நிலையில், இந்த ஆண்டு, 12 ஆயிரம் பேர் கூடுதலாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளி மாணவர்களும் அடங்குவர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X