சென்னை : ''தேசிய கல்விக் கொள்கையை அதி தீவிரமாக எதிர்க்கிறோம்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:கடந்த 2010ல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பொறியியல் கல்லுாரிகளில் தமிழ் வழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ் வழி படித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டது. எனவே, தொழில் வழிக் கல்வியை, தமிழ் வழியில் படிப்பது புதிது அல்ல; ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. தமிழகத்தில் இதுவரை பின்பற்றும் கல்வி முறையில், எந்த குறையும் இல்லை. மேல்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு என, அனைத்தும் சரியாக நடக்கிறது.
அவசியம் இல்லை
தமிழக அரசு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமரிடம் நேருக்கு நேராக, மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை ரத்து செய்ய, முதல்வர் கோரி உள்ளார். மத்திய பல்கலைகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை, 22 மத்திய பல்கலைகள் வேண்டாம் என்று மறுத்துள்ளன. மத்திய அரசின் கீழ் உள்ள பல்கலைகளே மறுத்துள்ளன. அதனால் தான், அந்த தேர்வு வேண்டாம் என்றோம்.கலை அறிவியல் கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது.
![]()
|
மத்திய அரசிடம் இருந்து, மாநில பட்டியலில், கல்வியை சேர்க்க வேண்டும். இதை, தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லிமென்டில் வலியுறுத்தி உள்ளனர்.தற்போது, தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் சூழலில் தமிழகம் இல்லை. பிரதமர் விழாவில், முதல்வர் எதை பேச வேண்டுமோ, அதை மிகத் தெளிவாகப் பேசி உள்ளார். 'நீட்' தேர்வை ரத்து செய்ய, பிரதமரிடம் எப்படி கேட்க வேண்டுமோ, அப்படி கேட்டுள்ளார்.
பா.ஜ.,வினர், 'ஜால்ரா' அடிக்க எதை வேண்டுமானாலும் கூறுவர்; அதை நாங்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. பா.ஜ., அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப பேசுகிறது. உண்மையில், அவர்களுக்கு ஒருமித்த கொள்கை இல்லை.முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் தேவையை கூறி உள்ளார்; அது, முதல்வரின் கடமை. கூறாமல் இருந்தால், எதையும் கூறவில்லை என்பர். தமிழகத்தின் தேவைகளை, மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில், பிரதமரிடம் கோரிக்கையாக வைத்துள்ளார்.பா.ஜ.,வினரை பொறுத்தவரை, கட்சியை வளர்க்க பேசுகின்றனர். தமிழகத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
எதிர்க்கிறோம்
முதல்வரின் கோரிக்கையை, பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளார். தவறு என்றால் பிரதமர் மறுத்திருப்பாரே? தமிழக மக்களின் தேவையை, புள்ளிவிபரங்களோடு முதல்வர் எடுத்துரைத்துள்ளார். இதை மக்களும் புரிந்துள்ளனர். மாநில கல்விக் கொள்கை தொடர்பாக, இரு தினங்களில் அரசாணை வரும். தேசிய கல்விக் கொள்கையில், சாதகமான விஷயங்கள் எதுவும் இல்லை. அனைத்து திட்டங்களும் இடைநிற்றலை அதிகரிக்கும்; குலக் கல்வியை ஏற்படுத்தும்; கிராமப்புற மாணவர்களை புறக்கணிக்கும். எனவே, தேசிய கல்விக் கொள்கையை அதி தீவிரமாக எதிர்க்கிறோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE