என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பேரறிவாளனை அரசியல் காரணங்களுக்காக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விடுதலை செய்யவில்லை; சட்டப்படியே அவரை விடுதலை செய்திருப்பதால், அவர் குற்றவாளி இல்லை' என்கிறார், 'சட்ட மேதையான' விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர் சொல்லும் வியாக்கியானப்படி, குற்றவாளி இல்லை என்றால், பேரறிவாளன், 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்தது ஏன்... அவருக்கு முதலில், உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது ஏன்... அவரை சோனியா மன்னித்தது ஏன்... பேரறிவாளன் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம், திருமாவளவன் பதில் சொல்வாரா? பேரறிவாளன் மட்டுமின்றி, நளினி உள்ளிட்ட ராஜிவ் கொலையாளிகளான மற்ற ஆறு பேரும், 'குற்றமற்றவர்கள்' என்பது திருமாவளவன் சொல்லித் தான் நமக்கு தெரிய வருகிறது.
இது தெரியாமல் முதல்வர் ஸ்டாலின், அவர்களை விடுவிப்பது எப்படி என, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டு நேரத்தை வீணடித்து விட்டார்.
திருமாவளவனிடம் பேசி இருந்தால், முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் குழப்பம் தீர்ந்து போயிருக்கும். ஆறு பேரையும் விடுதலை செய்ய நல்ல யோசனை சொல்லியிருப்பார்.மேலும், முதல்வருக்கு சட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால், இனிமேல் அவர் அரசு வக்கீல்களிடம் ஆலோசனை கேட்க வேண்டாம். 'சட்டமேதை'யான திருமாவளவனிடம் கேட்டால் போதும்... எப்படிப்பட்ட சட்டச் சிக்கல்களுக்கும் தீர்வு சொல்லி விடுவார்.
அரசியல் தலைவர்களை கொலை செய்ய நினைப்பவர்களும் துணிந்து செயல்படலாம். அவர்களை குற்றமற்றவர்கள் என்று சொல்லி விடுதலை வாங்கித் தர, ஆபத்பாந்தவனாக, அனாத ரட்சகனாக, திருமாவளவன் இருக்கிறார் என்பதை யாரும் மறக்க வேண்டாம். நல்ல அரசியல் தலைவர்... இவரை நம்பி ஒரு கூட்டம்... எல்லாம் காலத்தின் கோலம் அல்ல... அலங்கோலம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE