தமிழ்நாடு நிகழ்வுகள்:
பொதுப்பணித்துறை டெண்டரில் மோதல் : கார் கண்ணாடி உடைப்பு
பழநி :திண்டுக்கல் மாவட்டம் பழநி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டெண்டர் கோருவது தொடர்பான மோதலில் ,சேலம், ஈரோடு, திருப்பூர் ஒப்பந்ததாரர்கள் தாக்கப்பட்டனர்.
கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.பழநி அருகே வரதமாநதி அணையின் தடுப்பு அணையாக சக்கிலியன் அணைக்கட்டு உள்ளது. இதன் ஷட்டரை சீரமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் பொதுப்பணித்துறை சார்பில் கோரப்பட்டன.நேற்று இறுதி நாள் என்பதால், சேலம், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திருப்பூரை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் பலர் வந்தனர். உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் சிலர் அவர்களை தடுத்தனர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.வெளியூரை சேர்ந்தவர்களின் கார் கண்ணாடிகளை உள்ளூர் ஒப்பந்ததாரர்களின் ஆதரவாளர்கள் உடைத்தனர். மோதலை தொடர்ந்து இதன் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.ஒப்பந்ததாரரான மேட்டூரை சேர்ந்த பெருமாள் கூறுகையில், " ரூ.2 கோடிக்கான டெண்டர் ஆவணங்களை சீல் செய்யப்பட்ட கவரில் எடுத்து வந்தேன். அலுவலகத்துக்குள் நுழையவிடாமல் சிலர் தடுத்தனர், என்றார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோபால் கூறுகையில்,"டெண்டர் கவரை பெட்டியில் போட உள்ளே சென்றபோது சிலர் எங்களை தடுத்து தாக்கினர்.
உடனடியாக போலீசார் எங்களை வெளியே போக அறிவுறுத்தினர்," என்றார்.
கணவனை கொன்று நாடகம்: மூவருடன் மனைவி கைது
கோபி,:கோபி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை கொன்று நாடகமாடிய மனைவி உட்பட நான்கு பேரை, பங்களாப்புதுார் போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம், கோபி, அரசூர் அருகே குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 27; பூட்டு, சாவி வியாபாரி. இவரது மனைவி மகேஸ்வரி, 26; சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவன கணக்காளர்.
சத்தியமங்கலம் அருகே சின்னட்டிபாளையத்தில் லோகநாதன் பைக்கில் சென்ற போது, கடந்த 23ல், நாய் குறுக்கே வந்ததால், சாலையோர மைல் கல்லில் மோதி இறந்ததாக, அவரது மனைவி பங்களாப்புதுார் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக, லோகநாதனின் தாய் சாந்தி, 50, பங்களாப்புதுார் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதனால் மகேஸ்வரியிடம் போலீசார் விசாரித்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து, நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
போலீசார் கூறியதாவது:மகேஸ்வரிக்கு, அவருடன் நிறுவனத்தில் பணிபுரிந்த கவுரிசங்கர், 26, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது; லோகநாதன் கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட, மகேஸ்வரி, கவுரிசங்கர் திட்டம் தீட்டினர்.
திட்டப்படி, கடந்த 23ல் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு, லோகநாதனை மகேஸ்வரி அழைத்துச் சென்றார். அப்போது, கவுரிசங்கர், அவரது நண்பர்கள் விஜய், 23, விக்னேஷ்வரன், 24, ஆகியோருடன் சேர்ந்து கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர்.
லோகநாதன் உடலை வேனில் எடுத்துச் சென்று, சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் வீசினர். பைக்கில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி மைல் கல்லில் மோதி இறந்ததாக நாடகமாடியுள்ளனர்.
லோகநாதனின் தாய் புகாரால், மகேஸ்வரியின் கொடூர செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு போலீசார் கூறினர்.
************************
இந்திய நிகழ்வுகள்:
போதைப் பொருள் வழக்குநடிகர் ஷாருக் மகன் விடுவிப்பு
புதுடில்லி:'போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகனுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை' என, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து கோவாவுக்கு, கடந்தாண்டு அக்டோபரில் சென்ற சொகுசு கப்பலில், போதை விருந்து நடப்பதாக தகவல் கிடைத்தது. போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அந்த கப்பலில்
அதிரடிச் சோதனை
நடத்தினர்.
இதில், நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இந்த வழக்கு தொடர்பாக, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், 14 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில், ஆர்யன் கான் உட்பட ஆறு பேரின் பெயர்கள், இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
இவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என, குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கான் உட்பட ஆறு பேர் விடுவிக்கப்பட உள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது, தரமற்ற விசாரணை நடத்தியற்காக நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்
பட்ட துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
![]()
|
மேலும் ஒரு விளம்பர மாடல் கோல்கட்டாவில் தற்கொலை
கோல்கட்டா,: மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், மற்றொரு விளம்பர மாடல் நேற்று தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவைச் சேர்ந்த விளம்பர மாடல் மற்றும் 'டிவி' நடிகை பிதிஷா மஜும்தார், கடந்த 25ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், பிதிஷாவின் தோழியும், விளம்பர மாடலுமான மஞ்சுஷா நியோகி என்பவர், கோல்கட்டாவின் பட்டுலி என்ற இடத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தோழி பிதிஷா இறந்த நாளில் இருந்தே கடும் மன அழுத்தத்தால் மஞ்சுஷா பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அடிக்கடி அவரைப் பற்றி பேசி கதறி அழுததாகவும் அவரது தாய் தெரிவித்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE