வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை விழாவில் பிரதமர் மோடியின் பேச்சை, அவரது பாணியிலேயே, தமிழில் மொழிபெயர்த்து பேசி, பிரதமர் உள்ளிட்ட அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார், சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுதர்ஸன்.
நம் நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி, இந்த நாட்டின் தவ புதல்வர். அவரது நல் எண்ணங்கள், செயல்பாடுகள், உணர்வுகளை தமிழக மக்களிடம் சேர்க்க ஏங்கினேன். அந்த சமயத்தில் தான், என் குரல் ஆளுமையை தெரிந்து, 'மனதின் குரல்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை வழங்கினர்; அதை கேட்டு, பலரும் பாராட்டினர். ஒவ்வொரு மாதமும், 'மனதின் குரல்' நிகழ்ச்சி, தமிழகத்தில் பெரிய அளவில் மக்களை சென்றடைந்தது.
மோடியின் குரலாக, நான் தான் தமிழில் பேசுகிறேன் என தெரிந்து, நாமக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி என, பல ஊர்களில் இருந்தும், எனக்கு பலர் போன் செய்து பாராட்டினர். தற்போது மாவட்ட கலெக்டராக இருக்கும், முன்னாள் செய்தித் துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன், என்னை 2020ல் தொடர்பு கொண்டார். '2020 நவ., 20ல், நல திட்டங்களை துவங்கி வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை வருகிறார். அவரது உரையை, நீங்கள் தான் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்' என்றார்.
அப்பணியை சிறப்பாகவே செய்தேன். அமித் ஷா உள்ளிட்ட பலரும் பாராட்டினர். அதை தொடர்ந்து, 2021 பிப்., 14ல், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் உரையை மொழி பெயர்த்து பேசினேன்.'சிறப்பு' என பாராட்டியவர்கள், அடுத்ததாக அதே மாதம் 25ல், கோவை, 'கொடிசியா' அரங்கில் நடந்த மோடி நிகழ்ச்சிக்கும் அழைத்தனர். இப்படித் தான், மோடியின் குரலை, தமிழர்களிடம் உணர்வுகளோடு கொண்டு சென்றிருக்கிறேன். இது இறைவனின் அருட்கொடை. என் தந்தையுடன் படித்தவர்களுக்கு, இன்றைக்கு, 85 வயதுக்கு மேல் இருக்கும்.
அவர்கள், மோடியின் குரலாக நான் ஒலிப்பதை கேட்டு, என்னை புகழ்கின்றனர். அந்த பேறு, வேறு யாருக்கும் கிடைக்காதது. கடந்த காலங்களில், பிரதமருக்காக மொழி பெயர்ப்பாளர்களை அமர்த்தி, அவர்களுக்கு, 'டம்மி'யாக சிலரை நியமித்திருப்பர். மொழி பெயர்ப்பு சரியில்லாமல் போனால், 'டம்மி'யை பயன்படுத்துவர்.
நான், பிரதமரின் பேச்சை மொழிபெயர்த்து பேச துவங்கியது முதல், அந்த ஏற்பாடு இல்லை. மூன்று முறை, பிரதமர் மோடியின் உரையை மொழிபெயர்த்து பேசியுள்ளேன். ஒவ்வொரு முறையும், அவர் என்னை பாராட்டியதோடு, நன்றியும் கூறியுள்ளார்.
அவரது உரையை மொழிபெயர்த்து, அவரது நடையிலேயே ஏற்ற, இறக்கங்களோடு பேச, எனக்கு வாய்ப்பளித்த அவருக்கு நன்றி கூறி வருகிறேன். எத்தனை முறை மோடியின் பேச்சை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தாலும், அதை இறைவன் கொடுத்த கொடையாக நினைத்து, சிறப்பாகசெய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.-- நமது நிருபர் - -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE