மதுரை : மதுரை தமுக்கம் அருகே மாலா என்பவர் வளர்த்த பெண் யானை 'ரூபாலி'க்கு முறையான ஆவணம் இல்லை, அரசியல் நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தியுள்ளனர் எனக் கூறி மதுரை வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுப்படாத யானையை கயிறு கட்டி துாக்கி லாரியில் ஏற்றி திருச்சி எம்.ஆர்., பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பேராசிரியராக இருக்கும் மாலா குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக யானை வளர்க்கிறார்கள். 2019ல் மாலா பீஹாரில் இருந்து ரூபாலியை வாங்கி மதுரை அழைத்து வந்து வளர்த்து வந்தார். பின்னர் தான் பீஹார்க்காரர்கள் போலி ஆவணம் தயாரித்து யானையை அனுப்பியது தெரியவந்தது. இதையறிந்த வனத்துறை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மதுரை வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வன அலுவலர் குருசாமி தபாலா உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு யானையை மீட்க தயாராகி நள்ளிரவு 3:00 மணிக்கு லாரியில் ஏற்றி அதன் பாகனுடன் திருச்சி மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தோம். இப்போது அங்கு 'ரூபாலி' சக யானைகளுடன் சந்தோஷமாக இருக்கிறது என்றனர்.
மாலா கூறியதாவது: யானையை மீட்க நாங்கள் தடையாக இருக்கவில்லை. ஆனால் வன அதிகாரிகள் இரவு நேரம் தெரு முழுவதும் மின்தடை செய்து, அடம் பிடித்த யானையின் கால்களில் கயிறு கட்டி, மண் அள்ளும் இயந்திர வாகனம் மூலம் இழுத்து லாரியில் ஏற்றியதை தான் தாங்க முடியவில்லை. மாநகராட்சி தேர்தல் நேரத்தில் வில்லாபுரம் சென்ற யானை மேல் அங்கு வந்த கட்சியினர் சிலர் அத்துமீறி அமர்ந்தனர். இது குறித்து புகார் கொடுத்தும் வன அதிகாரிகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசியல் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தினோம் என எங்களை குற்றம்சாட்டுகிறார்கள். போலி ஆவணம் குறித்து எங்களுக்கும் யானை மதுரை வந்த பின் தான் தெரிந்தது என்றார்.
நீதிமன்ற உத்தரவு இல்லை
யானை உரிமையாளரின் வழக்கறிஞர் சதீஷ் ராஜ்குமார் கூறியதாவது: யானை 'ரூபாலி' ஆவணங்கள் குறித்த வழக்கு மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 6ல் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் இதுவரை எந்த தீர்ப்பும் வழங்காத நிலையில் வன அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி யானையை மீட்டதாக கூறுவது தவறு. யானை உரிமையாளர் வீட்டில் ஒட்டிய ஆவணத்தில் கூட தீர்ப்பு குறித்த தகவல்கள் இல்லை.
கோயிலுக்கு சென்ற யானையின் மீது அத்துமீறி அமர்ந்த தி.மு.க., கட்சியினர் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை ,என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE