சென்னை :சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து, செயலர் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்:
மஹாராஷ்டிரா, டில்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல, சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் பகுதிகளில் சற்று அதிகரித்து வருகிறது.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பாதிப்பு அதிகரிக்கும் சூழலில், தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். ஒரே பகுதியில் ஏற்படும் தொற்று மற்றும் குடும்ப தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில், 93.74 சதவீதம் முதல் தவணையும், 82.55 சதவீதம் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேநேரம், 18 வயதுக்கு மேற்பட்ட, 43 லட்சம் பேர் முதல் தவணையும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடவில்லை. தகுதியான 13 லட்சம் பேர் 'பூஸ்டர் டோஸ்' போடவில்லை. அனைவரையும் தடுப்பூசி போட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். தொற்று ஏற்பட்டவர்களுக்கு, வீடு மற்றும் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
பொது இடங்களில், மக்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தொற்று தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE