தொழில் மற்றும் சமூக அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து, சென்னையை விட அதிகமாக கோவையில் சொத்து வரியை உயர்த்தியிருப்பது எல்லாத் தரப்பிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சிகளுக்கும், கடந்த, 1998ல் சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன்பின், கடந்த, 2008லும், மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டபோது சென்னைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. சென்னைக்கு சொத்து வரி உயர்த்த வேண்டுமென்று, கடந்த, 2018ல் ஐகோர்ட் அறிவுறுத்திய நிலையில், அப்போதும் உயர்த்தப்படவில்லை; தற்போதுதான் உயர்த்தப்படுகிறது.
இப்போது சென்னையுடன் சேர்த்து கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில், சென்னை தவிர்த்து மற்ற அனைத்து நகர உள்ளாட்சிகளிலும் அரசு நிர்ணயித்த அதிகபட்ச சொத்துவரியை அப்படியே ஏற்றுக்கொண்டு, தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வருகின்றனர். சென்னைக்கு மட்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வு தொடர்பான அரசாணையில், மாநகராட்சி மன்றங்கள் தீர்மானம் செய்யலாம் என்று அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், கோவை மாநகராட்சியில் ஆளும்கட்சி கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அதிகபட்சமான சொத்து வரி உயர்வை ஏற்றுக்கொண்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாமன்றத்தின் அதிகாரமும், அரசாணையின் அர்த்தமும் ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு புரியவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அரசு மேலிடத்திலிருந்து அதிகாரிகளுக்கும், ஆளும்கட்சி தலைமையிடமிருந்து இங்குள்ள தி.மு.க.,கவுன்சிலர்களுக்கும் வந்துள்ள வாய்மொழி உத்தரவின் காரணமாகவே இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கட்டடத்தின் பரப்பளவை பொறுத்து, 600 சதுரஅடி, 600-1,200 சதுரஅடி, 1,201-1,800 சதுரஅடி, 1,800 சதுர அடிக்கு மேல் என, குடியிருப்புகளுக்கு நான்கு விதமாக சொத்து வரி உயர்த்தப்படுகிறது. அதிலும் வணிகக் கட்டடங்களுக்கே அதிகபட்சமாக, 150 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
இதன்படி உயர்த்தினாலும், சென்னையை விட கோவையில் அதிகமான சொத்து வரி கட்ட வேண்டியிருக்கும். அதாவது, 1998ல் சென்னையில், 10 ஆயிரம் ரூபாய் செலுத்திவந்த ஒரு கட்டடத்துக்கு, இப்போது, 100 சதவீதம் வரி உயர்த்தினாலும், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரி செலுத்த வேண்டும். அதே கோவையில், 1998ல், 10 ஆயிரம் ரூபாய் வரி செலுத்திய கட்டடத்துக்கு, 2008ல், 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டதால், 14 ஆண்டுகளாக ஏற்கனவே, 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றனர்.

அதே கட்டடத்துக்கு இப்போது மறுபடியும், 100 சதவீதம் வரி உயர்த்தப்படும்போது, 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இனிமேல் ஆண்டுதோறும் சொத்து வரி உயரும்போது, இந்த வித்தியாசம் அப்படியே உயர்ந்து கொண்டிருக்கும். இதனால், சொத்து வரி உயர்வை இப்போது சமமாக்கும்படி, சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டுமென்று தொழில் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
அதாவது, குடியிருப்புகளுக்கு, 600 சதுரஅடி கட்டடத்துக்கு, 25 சதவீத உயர்வை, 20 சதவீதமாகவும், 601-1,200 சதுர அடிக்கு, 50 சதவீதத்தை, 40 ஆகவும், 1,201-1,800 சதுர அடிக்கு, 75 சதவீதத்தை, 60 ஆகவும் குறைக்க வேண்டும். இதேபோல், தொழிற்சாலை கட்டடத்துக்கு, 75 சதவீதத்தை, 30 சதவீதமாகவும், வணிகக் கட்டடங்களுக்கு, 100 சதவீதத்தை, 40 சதவீதமாகவும் குறைக்க வேண்டுமென்று தொழில் மற்றும் வர்த்தக சபை கோவை கிளை கோரியுள்ளது.
ஆனால், இவை எதையுமே பொருட்படுத்தாமல் சொத்து வரியை அப்படியே உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக தி.மு.க., அரசு எப்போதுமே சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கோவையை அப்பட்டமாகப் புறக்கணிப்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE