வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க., 2020 - -21ம் நிதியாண்டில் அதிகபட்சமாக 149.95 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மாநில கட்சிகளில் அதிக வருவாய் ஈட்டிய கட்சி என பெயர் பெற்றுள்ளது.
நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள், 2020 - 21ம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் முன் சமர்ப்பித்தன.
இதில், 31 பெரிய கட்சிகளின் வரவு - செலவு கணக்குகளை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டான 2019 - 20ம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2020 - 21ல் 131 சதவீதம் உயர்ந்து, 149.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, நாடு முழுதும் உள்ள மாநில கட்சிகளின் மொத்த வருவாயில் 28 சதவீதமாகும். மாநில கட்சிகளின் வருவாயில் தி.மு.க., முதலிடம்
வகிக்கிறது.
இக்கட்சிக்கு அடுத்தபடியாக ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி 108 கோடி ரூபாயும், ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் 73 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்த வருமானங்கள் அனைத்தும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெறப்பட்டுள்ளன. கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் கிடைத்த வருமானத்தை விட அதிகம் செலவிட்டுள்ளதாக தி.மு.க., கணக்கு காட்டியுள்
ளது. இந்த நிதியாண்டில், 218 கோடி ரூபாய்க்கு செலவு கணக்கு காட்டப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த 2019 - 20ல், 89 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இந்த தொகை, 2020 - 21ல் 34 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், ம.தி.மு.க., மற்றும் பா.ம.க., கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளன.
கடந்த 2019ல் 1.50 கோடியாக இருந்த ம.தி.மு.க., வருமானம் 2020ல் 2.86 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பா.ம.க.,வின் வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE