கோவை: தண்ணீர் இறைக்கும் 'மோட்டார் பம்ப் செட்' உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணியில் இருந்த கோவை தற்போது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதன் உற்பத்தியாளர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.

கோவை மாவட்டமானது 'மோட்டார் பம்ப் செட்' உற்பத்தி கேந்திரமாக திகழ்கிறது. தேசிய அளவில் முதலிடத்தில் இருந்து வந்த கோவை, தற்போது உற்பத்தியில் மூன்றாம் இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளதாக குமுறும் தொழில்துறையினர், கோவையில் இருந்து பெரும்பாலான 'பம்ப்' தயாரிப்பு நிறுவனங்கள் வடமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தது தான் காரணம் என்கின்றனர்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கார்த்திக் கூறியதாவது:
'பம்ப் செட்' உற்பத்தியில் கோவை கோலோச்சிய காலம் மாறிவிட்டது. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு, ஸ்திரமில்லாத வர்த்தக நிலை உள்ளிட்ட சூழல்களை தாண்டி ஒரு நிறுவனத்தை செழுமையாக கொண்டு செல்வது கடினம். கோவையில், 15க்கும் மேற்பட்ட பம்ப் செட் தயாரிப்பு தொழிற்கூடங்கள் இழுத்துமூடப்பட்டுள்ளன.
பி.ஐ.எஸ்., உரிமம் பெற்ற பம்ப் நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தற்போது, 366 ஆகவும், குஜராத்தில், 659 ஆகவும் உள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. கோவையில் பம்ப் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது வேதனைக்குரியது.

சர்வதேச அளவிலான புள்ளிவிபரங்களின்படி, நம் நாட்டில் பம்ப் தயாரிக்கும் தொழிற்கூடங்களின் எண்ணிக்கை, 80 சதவீதமாக இருந்தது. தற்போது, 55 சதவீதமாக குறைந்து சர்வதேச அளவில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இதிலிருந்து நாம் விடுபட வேண்டும். கோவையிலும், தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் பம்ப் உற்பத்தியில் மீண்டும் முன்னணி நிலைக்கு செல்ல மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE