சென்னை: சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு வெட்கப்படுவதாக கூறிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று முன்தினம்(மே 26) பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து விலக்கு, கச்சத்தீவு மீட்பு, தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை,
இந்தியாவின் சாதாரண குடிமகனாகவும், பெருமை மிக்க தமிழனாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன். பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ., நிகழ்ச்சிக்கு வரவில்லை. பிரதமராக அரசு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். தி.மு.க., உண்மையை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியல் செய்வதில் மட்டுமே ஆர்வம்.

பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மொழி மீது தனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தினார். பல இடங்களில், பல முறை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு முதல்வரிடம் பதில் இருக்காது என நம்புகிறேன். அவர், இவ்விஷயத்தில் அற்பத்தனமான அரசியல் மட்டுமே செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள்:
அமைச்சர் பொன்முடி

பிரதமர் விழாவில் முதல்வர் எதைபேச வேண்டுமோ அதை மிகத் தெளிவாக பேசி உள்ளார். ‛நீட்' தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் எப்படி கேட்க வேண்டுமோ அப்படி கேட்டுள்ளார். பா.ஜ.,வினர், ‛ஜால்ரா' அடிக்க எதை வேண்டுமானாலும் கூறுவர். அதை நாங்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை.பா.ஜ., அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப பேசுகிறது. உண்மையில், அவர்களுக்கு ஒருமித்த கொள்கை இல்லை. முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் தேவையை கூறி உள்ளார். அது, முதல்வரின் கடமை. கூறாமல் இருந்தால், எதையும் கூறவில்லை என்பர். தமிழகத்தின் தேவைகளை, மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில், பிரதமரிடம் கோரிக்கையாக வைத்துள்ளார். பா.ஜ.,வினரை பொறுத்தவரை, கட்சியை வளர்க்க பேசுகின்றனர். தமிழகத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. முதல்வரின் கோரிக்கையை, பிரதமரிடம் ஏற்றுக்கொண்டுள்ளார். தவறு என்றால் பிரதமர் மறுத்திருப்பரே? தமிழக மக்களின் தேவையை, புள்ளி விவரங்களோடு முதல்வர் எடுத்துரைத்துள்ளார். இதை மக்களும் புரிந்துள்ளனர்.
அமைச்சர் சேகர்பாபு

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பேசிய கருத்து குறித்து அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார். அண்ணாமலையின் மிரட்டல், உருட்டலுக்கு எல்லாம் திமுக அஞ்சுகிற இயக்கமல்ல. எத்தனையோ மிரட்டல்களை கடந்து வந்த இயக்கம்தான் தி.மு.க., இந்தியாவில் எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத துணிவு, தன்மானம், திராணி, தெம்பு ஆகியன முதல்வருக்கு உள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி வழங்குங்கள் என கேட்டால் அது தவறா? நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என கோரிக்கை வைப்பது தவறா? மாநிலத்தின் கோரிக்கையை பிரதமர் கவனத்திற்கு முதல்வர் எடுத்து சென்றார். கோரிக்கை வைத்தாலே மிரட்டல் என்றால், அதற்கு எல்லாம் அடிப்பணிகிற இயக்கம் தி.மு.க., அல்ல. அண்ணாமலை எதை வேண்டுமானாலும் கூறட்டும். அதை சந்திக்க தி.மு.க., தயாராக உள்ளது. ஜிஎஸ்டி பாக்கி குறித்தும், தமிழகத்திற்கான கோரிக்கைகள் குறித்தும் இரண்டு முறை பிரதமர் மோடியை முதல்வர் சந்தித்துள்ளார். மக்களுக்கான கோரிக்கைகளை கேட்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுதுதி முதல்வர் கேட்டார். மத்திய அரசிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஒரு மாநிலத்திற்கு என்ன வேண்டும் என முதல்வர் சொல்வது எப்படி நாடகம் ஆகும். மாநிலத்தின் தேவையை கேட்க முதல்வருக்கு அருகதை, உரிமை இல்லையா? தேவைகளை கேட்டதை தவறு சொல்வதில், அவர்களின் அடிமை உணர்வு தெரிகிறது. எங்களை போலவே அடிமை உணர்வுடன் இருங்கள் என்று கூறுகின்றனர். பா.ஜ., தலைவரின் கருத்து தவறானது. முதல்வர் தவறாகவோ, ஒழுக்க குறைவாகவோ பேசவில்லை. மத்திய அரசுக்கு மாநில அரசு பாக்கி வைத்திருந்தால் தவறில்லை. ஆனால், தர வேண்டியதை தராமல் இருப்பது தான் தவறு. சேர வேண்டிய திட்டங்கள் சேரவில்லை என்பதுதான் முதல்வர் குற்றச்சாட்டு. அண்ணாமலை, முழங்காலுக்கும், உச்சதலைக்கும் முடித்து போடுவது தவறு
விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்

பிரதமர் மேடையில் தமிழக பிரச்னைகளை கோரிக்கைகளாக முதல்வர் பேசியது தவறு என அரைவேக்காடுகள் கூறுகிறார்கள். மக்களின் பிரச்னைகளை பிரதமரிடமும் பேசுவது தான் மக்கள் முதல்வரின் முதல்கடமை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையை பிரதமரிடம் முன்வைப்பது முதல்வரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். மாறாக மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை அல்ல. தமிழ் மொழியை பற்றி அவ்வப்போது வாய்ஜாலம் காட்டும் பிரதமர், சம உரிமைக்கான கோரிக்கை பற்றியும் கூட எதுவும் பேசவில்லை.
அண்ணாமலைக்கு இதைபற்றி எல்லாம் அக்கறை உண்டா? முதல்வர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஆனால், அதை மறைத்து தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதல்வரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டு தனத்தையே காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE