வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தி.மு.க., மாவட்ட செயலர் கூட்டம் கட்சி தலைவரும் , முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

சென்னை திமுக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:14 வயது சிறுவனாகத் அரசியலுக்கு வந்து தாய்மொழியைக் காத்திட சளைக்காமல் போராடி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்து எப்போதும் தமிழ் உணர்வுடனும் உத்வேகத்துடனும், தனது இறுதி மூச்சு வரையிலும் சோர்வின்றிச் செயலாற்றியவர். தேர்தல் களத்தினை 13 முறை எதிர்கொண்டு, நின்ற தொகுதிகள் அனைத்திலும் வென்று, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து,19 ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து, தமிழ்நாட்டை நயமாகச் செதுக்கிய 'நவீனத் தமிழ்நாட்டின் தந்தையாகத்' திகழ்ந்தவர்.சமூகநீதி - சமச்சீரான வளர்ச்சி - சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் கருணாநிதி. இவரது 99 வது பிறந்தநாளை (ஜூன்3) தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவது , இதுபோல் முதல்வர் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் அவருக்கு துணையாக நிற்கவும் சபதம் ஏற்கப்பட்டது.
ஸ்டாலின் உரை
கூட்டத்தில் கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.அரசின் நிதிநிலைமை மேம்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது மக்களிடையே நமக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. 'திராவிட மாடல்' என்ற சொல் - தமிழ்நாட்டில் மட்டுமல்ல - மற்ற மாநிலங்களிலும் - இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

தொண்டர்களின் உழைப்பின் காரணமாகவே முதலமைச்சராக நான் இருக்கிறேன். பலரும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள் . சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருக்கிறீர்கள். மாவட்டக் கழகச் செயலாளர்களாக ஆகி இருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலின் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். நீங்கள் அனைவரும் தொண்டர்களை கவனிக்க வேண்டும். அவர்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.