திருச்சி: மணப்பாறை அருகே, கள்ளத்தொடர்பால் கர்ப்பமடைந்த பெண், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையை வீசி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே, ஆண்டவர்கோவில் பகுதியில் உள்ள மான்பூண்டி ஆற்றின் கரையில் நேற்று, முட்புதருக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள், புதருக்குள் பார்த்த போது, பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கோவிலில், உடலில் காயங்களுடன் ஒரு பெண் மயக்க நிலையில் இருந்தார். அவரையும் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், மணப்பாறை அருகே உள்ள இனாம் ரெட்டியாபட்டியைச் சேர்ந்த, 38 வயதான அந்த பெண்ணுக்கு, 8 வயதில் மகள் உள்ளார்; கணவர் இறந்து விட்டார். திருப்பூரில் வசித்து வந்த அவருக்கு ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், கர்ப்பமடைந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால், மான்பூண்டி ஆற்றில், முட்புதருக்குள் சென்று, தனக்கு தானே பிரசவம் பார்த்து, குழந்தை பெற்று, குழந்தையை வீசியுள்ளார். தாய்க்கும், குழந்தைக்கும், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.