கோவை : கோவை மாவட்ட மேற்கு எல்லையில் கேரளாவின் பாலக்காடு மாவட்டமும், கிழக்கு எல்லையில் மண்ணார்காடு, பாலக்காடு, சித்துார் தாலுகாக்களும் உள்ளன. இந்த எல்லை வட்டங்கள் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளன. பல ஆண்டு கோரிக்கைகளுக்கு பின், மண்ணார்காடு வட்டத்தை பிரித்து, ஆனைகட்டிக்கு மேற்கே அட்டப்பாடி வட்டம், கேரள அரசால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்டது.
அதேபோல், மொழி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் புதுச்சேரி (வாளையார்), வடகரப்பதி (வேலந்தாவளம்), எருத்தேன்பதி, கொழிஞ்சாம்பாறை, பெருமாட்டி (மீனாட்சிபுரம்), முதலைமடை ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைத்து புதிய தாலுகா உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கேரள தமிழ் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் பேச்சிமுத்து கூறியதாவது:தமிழக எல்லை பகுதிகளாகவும், கேரளாவில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாவும் இருப்பதால், புதுச்சேரி, வடகரப்பதி உட்பட இடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பாசன வசதிகள் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில்லை. சுமார் 2 லட்சம் தமிழர்கள் இப்பகுதிகளில் வசிக்கின்றனர்.
இவர்களின் வாழ்கை தரம் மேம்பட கொழிஞ்சாம்பாறையை மையமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட வேண்டும். நில அளவைக்கு போதிய சர்வே அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜனை சந்தித்து மனு அளித்துள்ளோம். வருவாய் துறையினரும், பாலக்காடு கலெக்டரும் உடனே அறிக்கை தர அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.