சென்னை : புதிய ஊதியம் நிர்ணயம் தொடர்பான பேச்சை விரைவில் துவக்குமாறு, மின் வாரியத்திற்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் போன்ற பதவிகளில், 85 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, 2015 டிச., முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம், தொழிற்சங்கங்கள் மற்றும் மின் வாரியம் இடையே, 2018 பிப்ரவரியில் கையெழுத்தானது. அப்போது, 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.பின், 2019 டிச., முதல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதுவரை, அதற்கான பேச்சை மின் வாரியம் துவக்காமல் உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:தற்போது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள சூழலில், பணிச்சுமையும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கடும் சிரமத்திற்கு இடையில் ஊழியர்கள், மழை, வெயிலை பொருட்படுத்தாமல் பணிபுரிகின்றனர்.சமீப காலமாக, புதிய மண்டலங்கள் பிரிப்பு, பிரிவு அலுவலகம் பிரிப்பு உள்ளிட்ட ஊழியர்கள் தொடர்புடைய பணிகளில், தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றன.
இது, ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து துறையில் ஊதிய உயர்வு தொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் மின் வாரியம், 2019 டிச., முதல் வழங்க வேண்டிய ஊதிய நிர்ணயம் தொடர்பாக, இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பேச்சு நடத்தாமல் உள்ளது. இதனால், ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.அதற்கு நிர்வாகம் இடம் அளிக்காமல், விரைவாக ஊதிய உயர்வு பேச்சை துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.