வரும் செப்டம்பர் அல்லது அக்டோபருக்குள் சோனியாவுக்கு பதிலாக, காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற நிலையில், இதற்கான தேர்தல் மேலும் தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அதில் தோல்வி ஏற்பட்டால், புதிய தலைவர் மீது பழி விழும் என்பதால் ராகுல் உஷார் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2014 மற்றும் 2019 என அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்தவுடன், 2020 ல், காங்.,கின் ௨௩ மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி, சோனியாவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
ஆலோசனை கூட்டம்
கட்சியை சீரமைக்க வேண்டும், முழுநேர தலைவர் தேவை என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தலை விரைவு படுத்த முடிவு செய்யப்பட்டது.கட்சியில், அனைத்து நிலைகளுக்கான தேர்தல் முடிவுக்கு வந்தவுடன், இறுதியாக புதிய தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும். அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடி, அதில் தான் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால், இது தள்ளிப்போய்க் கொண்டே இருக்க, இந்த ஆண்டு துவக்கத்தில், அகில இந்திய மாநாடு கூடி, அதில் புதிய தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்பட்டது.இந்த நடவடிக்கையும், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களால் மேலும் தள்ளிப்போனது. அந்த சமயத்தில் பேட்டிஅளித்த காங்., உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர் மதுசுதன் மிஸ்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், 'வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குள் புதிய தலைவர் தேர்தல் நடந்து முடிந்துவிடும்' என்றனர்.இந்நிலையில், புதிய தலைவருக்கான தேர்தல் மீண்டும் தள்ளிப்போகலாம் என்று தெரியவந்து உள்ளது. காரணம், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது தான். இவற்றிலும் காங்., வெற்றி பெறுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.
பெரும் சரிவு
சில நாட்களுக்கு முன், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கூட, 'குஜராத்திலும், ஹிமாச்சல பிரதேசத்திலும், பெரும் சரிவைக் காண காங்., காத்துக்கொண்டிருக்கிறது' என கருத்து தெரிவித்து இருந்தார். தவிர, குஜராத்தில் மிக முக்கிய இளம் தலைவரான ஹர்திக் படேல், காங்.,கிலிருந்து வெளியேறியதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தால், அது புதிய தலைவராக தேர்வாகும் ராகுலைத்தான் பாதிக்கும். தலைமைக்கு வந்தவுடன், மீண்டும் தோல்வியா என்ற பேச்சு கிளம்பும். சோனியா குடும்பத்து கவுரவமும், ராகுலை துாக்கி நிறுத்தும் நடவடிக்கைகளுக்கும் பின்னடைவு ஏற்படலாம்.இதற்கு ஒரே வழி, காங்., புதிய தலைவர் தேர்தலை, சட்டசபை தேர்தல்களுக்குப் பின் நடத்த காங்., தலைமை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.இத்தேர்தலை, அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளிப்போட்டு, 'புத்தாண்டில் புதிய தலைவர்' என புது கோஷத்தை, தொண்டர்களுக்கு அளிக்கலாம் என்று காங்., மேலிடம் கருதுகிறது.
நடவடிக்கை
அதே நேரத்தில், இந்தக் கருத்து இன்னும் பரிசீலனையில் மட்டுமே இருக்கிறது. காரணம், தேர்தலை நடத்தும் மதுசுதன் மிஸ்ரி போன்றவர்கள், உட்கட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் எந்த தொய்வும் இல்லாதபடி நடத்த தீவிரமாக உள்ளனர்.என்றாலும், சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நடத்தப்பட்ட சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகள் ஒரு வடிவத்துக்கு வரும் என தெரிகிறது.இதன்பின், புதிய தலைவர் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமான முடிவை காங்., மேலிடம் அறிவிக்கலாம் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது டில்லி நிருபர் -