கொச்சி : 'பேரணி, போராட்டம் போன்றவற்றில் பங்கேற்போர் எழுப்பும் கோஷங்களுக்கு, அதை நடத்தும் அமைப்பின் நிர்வாகிகளே பொறுப்பு' என, கேரள உயர் நீதிமன்றம் கூறிஉள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஆலப்புழாவில் 21ம் தேதி, ஹிந்து மத அமைப்பான பஜ்ரங் தளம், முஸ்லிம் அமைப்பான 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' ஆகியவை பேரணிகள் நடத்த அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.பேரணிகளுக்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நடத்திய போராட்டத்தின்போது, 11 வயது சிறுவன், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகவும், மாற்று மதத்தினருக்கும் எதிராகவும் கோஷமிட்டான்.இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த நாட்டில் என்ன நடக்கிறது. எந்த ஒரு பேரணி, ஆர்ப்பாட்டத்தின்போதும் எழுப்பப்படும் கோஷங்களுக்கு, அதை ஏற்பாடு செய்வோரே பொறுப்பாவர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ, பேரணியில் பங்கேற்றோர் கோஷமிட்டாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே அதற்கு பொறுப்பாவார்.
அதனால், எந்த ஒரு பேரணி, போராட்டத்தின்போதும் தவறுகள், வன்முறைகள் நடந்தால், நிகழ்ச்சியை ஏற்பாட்டாளரையே பொறுப்பாக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதற்கிடையே, பேரணியில் கோஷமிட்ட சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.