சென்னையில் பிரதமர் பங்கேற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம், பிரதமருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது, பா.ஜ., - தி.மு.க., இடையிலான மோதலை அதிகரிக்கச் செய்யும் என, டில்லி பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
உற்சாக வரவேற்பு
மத்திய அரசு சார்பில், நிறைவடைந்த திட்டங்கள் துவக்க விழா, புதிய திட்டங்கள் திறப்பு விழா என, 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்க விழா, 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. விழா அரங்கில், தி.மு.க., - தொண்டர்கள்அதிக அளவில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும், பா.ஜ., தொண்டர்களுக்கும் இடையே, விழா துவங்குவதற்கு முன்பே, கோஷம் எழுப்புவதில் போட்டி ஏற்பட்டது; இது, விழா முடியும் வரை தொடர்ந்தது.
முதல்வர் பேசுகையில், மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிட்டார். மேலும், 'மத்திய அரசின் வரி வருவாயில், தமிழகத்துக்கு 1.21 சதவீதம் மட்டுமே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 'தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்துக்கும் அளிக்கக் கூடிய பங்கிற்கு ஏற்ப, மத்திய அரசு திட்டங்களிலும், நிதியிலும் பங்களிப்பை உயர்த்த வேண்டும். அதுதான் உண்மையான கூட்டாட்சி யாக அமையும்' எனறார்.மேலும், 'ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை வழங்க வேண்டும். 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், தி.மு.க.,வினர் கரகோஷம் எழுப்பினர்.அடுத்து பிரதமர் பேசுகையில், பா.ஜ.,வினர் கரகோஷம் எழுப்ப, தி.மு.க.,வினர் அமைதி காத்தனர். இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பிரதமர், தன் உரையை முடிக்கும்போது, 'பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம்' என பலமுறை கூறி, தொண்டர்களையும் கூற வைத்தார்.விழா அரங்கிற்கு வந்த பிரதமருக்கு, இதுவரை இல்லாத வகையில், பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது, தமிழக கட்சிகளை ஆச்சரியப்பட வைத்தது.கருத்துஇந்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்த பிரதமர், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். எந்த விழாவுக்கு சென்று வந்தாலும், விழா தொடர்பான தன் கருத்துக்களை, மூத்த அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம்.அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலருடன், தமிழக விழா குறித்த கருத்துக்களை,பிரதமர் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
தமிழக மக்கள் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு வருத்தம் அளித்ததாக தெரிவித்துள்ளார். 'தமிழகத்துக்கு, 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன். அது குறித்து எதுவும் பேசாமல், நீட் தேர்வு, திராவிட மாடல் குறித்து ஸ்டாலின் பேசினார்' எனக் கூறிஉள்ளார்.
எதிர்கோஷம்
முதல்வரின் செயல்பாடு பிரதமருக்கு கசப்பை தந்துள்ளதையே, அவரது பேச்சு காட்டியதாக, மூத்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.தமிழக முதல்வர் ஆங்கிலத்தில் கோரிக்கைகளை கூறியதால், அவற்றை பிரதமர் புரிந்து கொண்டார்.மேலும், 'ஒன்றியம்' என முதல்வர் கூறியபோது, பா.ஜ.,வினர் எதிர் கோஷம் எழுப்பினர்.
இதை கவனித்த பிரதமர், விமான நிலையம் வந்த பின், கவர்னர் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளிடம் விசாரித்துள்ளார். அவர்கள் விளக்கியதை கேட்டதும், பிரதமருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.சென்னை பயணம், பிரதமருக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும், முதல்வரின் செயல்பாடு கசப்பை ஏற்படுத்தி உள்ளதால், பா.ஜ., - தி.மு.க., இடையிலான மோதல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, பா.ஜ., உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமது டில்லி சிறப்பு நிருபர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE