சென்னை : வருமான வரித் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, இயக்குனர் சூர்யா தாக்கல்செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு சொந்தமான இடங்களில், 2005ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
படங்களை இயக்கிய வகையில், சம்பளமாக பெறப்பட்ட தொகையை, கணக்கில் காட்டாதது தெரிய வந்தது.குறிப்பிட்ட நாட்களுக்குள் வருமான கணக்கு விபரங்களை தாக்கல் செய்யாதது; 'அட்வான்ஸ்' வரி செலுத்தாதது; உண்மையான வருமானத்தை மறைத்தது என, சூர்யாவுக்கு எதிராக, எழும்பூர் நீதிமன்றத்தில், ஆறு வழக்குகளை வருமான வரித் துறை தொடர்ந்தது.இவற்றை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சூர்யா தாக்கல் செய்த மனுக்களில், 'துறை நடவடிக்கைகள் முடிவடையாத நிலையில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. அபராதம், வட்டி செலுத்த வேண்டியதில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி சந்திரசேகரன் முன், விசாரணைக்கு வந்தன. வருமான வரித் துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.ஷீலா ஆஜராகி, ''சோதனை நடவடிக்கைக்கு பின், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ''சோதனை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்காது; வருமானம் மறைக்கப்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்,'' என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன் பிறப்பித்த உத்தரவு:வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தகுதி அடிப்படையில் முறையீடுகளை பைசல் செய்யவில்லை.
வருமான கணக்கு தாக்கல் செய்யாதது; உண்மையான வருமானத்தை மறைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பரிசீலிக்கவில்லை.தகுதி அடிப்படையில் தீர்வு காணாத நிலையில், தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் முகாந்திரத்தில், வழக்குகளை ரத்து செய்ய முடியாது. புகாரில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதுள்ளது.மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்ப முகாந்திரம்உள்ளது. எனவே, விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE