திண்டிவனம் : திண்டிவனம், ஒலக்கூரில் உள்ள சிவன் கோவிலில் திருடு போன சிலைகளை கண்டுபிடித்து தரக்கோரி, ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., ஞானபிரகாசத்திடம், ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோவிலில் திருடு போன சிலைகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் மனு அளித்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டி:ஒலக்கூரில் உள்ள சிவன் கோவில், 960 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜேந்திர தேவர் என்ற சோழ தமிழ் வேந்தனால் கற்கோவிலாக கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு கொடையாளி மூலம் விக்னேஷ்வர் சிலை கொடுக்கப்பட்டுள்ளது.கோவில் கருவறை வெளியே, ஐந்து திருமோனி கல் தெய்வங்கள் மக்கள் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது.
புறக்கணித்து விட்டனர்
இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டி, அறநிலையத் துறையினரால் அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுநாள் வரை கொண்டு செல்லப்பட்ட கல் சிற்பங்கள், மீண்டும் கோவிலுக்கு வரவில்லை.பழமை வாய்ந்த இந்த கோவிலில் பூஜை எதுவும் நடக்கவில்லை. கோவிலை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அறநிலையத் துறையினர் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.கோவிலில் இருந்த பல சிலைகள், வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. சிலை கடத்தல் தொடர்பாக அறநிலையத் துறையினரோ, பொது மக்கள் தரப்பிலிருந்தோ ஒலக்கூர் போலீசில் இதுவரை புகார் கொடுக்கவில்லை.
போலீசார் நடவடிக்கை
இந்த சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் பலர் இறந்திருக்கலாம். சிலர் வெளிநாட்டிலும், உள்ளூரிலும் இருக்கலாம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, ஒலக்கூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE