சென்னை மாநகராட்சியில், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

. பெரும்பாலான தி.மு.க., மண்டலக் குழு தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களும் சொத்து வரி உயர்வை எதிர்ப்பதால், இந்தாண்டே அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரி பிரதானமானது. ஆண்டுதோறும் சொத்து வரியின் வாயிலாக மாநகராட்சிக்கு, 1,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.கடந்த 1998ம் ஆண்டில் இருந்து, சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
அதேநேரம், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து, 2011ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திருவொற்றியூர், அம்பத்துார், மணலி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், 2008ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது.இதனால் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களில் சொத்து வரி குறைவாகவும், திருவொற்றியூர் பகுதியில் அதிகமாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 2022 - 23ம் நிதியாண்டில் இருந்து மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்டவற்றில் சொத்து வரியை உயர்த்த, தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சியில், கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, சொத்து வரி உயர்வுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டது.இதில், 50க்கு மேற்பட்டோர் மட்டுமே, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதினர். அதேநேரம், சொத்து வரியை உயர்த்துவதற்கு, மாநகராட்சி கூட்டத்தில் ஆதரவு அளிக்கக் கூடாது என, ஒவ்வொரு கவுன்சிலர்களிடமும், அந்தந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில், சொத்து வரியை இந்தாண்டே நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.ஏற்கனவே, ஐந்து மண்டலக் குழு தலைவர்கள், தி.மு.க.,வின் 45 கவுன்சிலர்கள், அ.தி.மு.க.,வின் 15 கவுன்சிலர்கள், பா.ஜ., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும், 2008ல் உயர்த்தப்பட்ட பகுதிகளில், மீண்டும் சொத்து வரியை உயர்த்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், ஒருமித்த ஆதரவுடன் சொத்து வரி உயர்வு தீர்மானம், இந்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அடிப்படையில், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த, 15வது மத்திய நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.அதன் அடிப்படையில் தான், காலிமனைக்கு சதுர அடிக்கு 1 ரூபாய் என, சொத்து வரி விதிக்கப்படுகிறது. மேலும், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் கட்டணம், வாடகை அடிப்படையில் விதிக்கப்பட்டு வரும் சொத்து வரி, குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கான சொத்து வரி போல் விதிக்கப்படும்.

தற்போது, விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களில், சொத்து வரி கூடுதலாக இருப்பதாக, கவுன்சிலர்கள் தெரிவித்து உள்ளனர்.அனைத்து மண்டலங்களிலும் சொத்து வரி மறுசீராய்வு செய்யப்பட்டுள்ளது. இவை, மாநகராட்சி கூட்டத்தில், அனைத்து கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்தாண்டு முதலே நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கைஇந்நிலையில், சென்னையில் உரிய காலத்தில் சொத்து வரி செலுத்தாத, மூன்று திருமண மண்டபங்கள், ஆறு ஹோட்டல்கள், ஒரு திரையரங்கம், ஒரு மருத்துவமனை, நான்கு வணிக வளாகங்கள் மற்றும் 107 அங்கன்வாடிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. 63 பெரிய நிறுவனங்களின் கட்டடங்களுக்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு வைக்கப்பட்டது. அதன்பின், நிலுவையில் இருந்த, 40 கோடி ரூபாய், 15 நாட்களில் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை 220.64 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
தெருக்களின் ஜாதி பெயர் நீக்கம்
சென்னையில் தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணியை மாநகராட்சி துவங்கி உள்ளது.சென்னை மாநகராட்சியில், 33 ஆயிரத்து 834 தெருக்கள் உள்ளன. இவற்றின் பெயர் பலகைகளை, 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தில் மாற்றியமமைக்கும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி, 8.43 கோடி ரூபாய் செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றிஅமைக்கப்பட்டு வருகின்றன.இதில், தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தெருப்பெயருடன் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை, மாநகராட்சி நீக்க துவங்கியுள்ளது. தன்படி, அடையாறு மண்டலம் 171 வார்டில் உள்ள, அப்பாவோ கிராமணி 2வது தெரு என்றிருந்த பெயரை, 'அப்பாவு (கி) தெரு' என, பெயர் மாற்றம் செய்து, புதிய பெயர் பலகையை மாநகராட்சி வைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE