நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ;
குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயி களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு எல்லாம் கிடைக்குது... ஆனா, அவங்க விளைச்சலுக்கு உரிய விலை தான், எந்த ஆட்சியிலும் கிடைக்க மாட்டேங்குது!
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு ;
தமிழகத்தில் பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு அடிப்படையில், வனத்துறை செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஜூன் முதல் நவ., வரையிலான ஆறு மாதங்களில், 1.77 கோடி மரக்கன்றுகள் நடும் பணிகளை முடிக்க வேண்டும்.
நல்ல விஷயம் தான்... மரக்கன்று களை நடுறதோடு நிறுத்திக்காம, அவற்றை வளர்த்து மரமாக்கவும் முயற்சிகள் எடுக்கணும் என்பதை மறந்துடாதீங்க!
மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி:
சென்னை வந்த பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். நானும், பிரதமரும் ஆன்மிகம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை விவாதித்தோம். சிலவற்றை வெளியே கூற முடியாது.
மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை தி.மு.க.,வினர் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறதா குற்றம் சாட்டியிருந்தீங்களே... அது பற்றி, பிரதமரிடம் புகார் ஏதும் சொல்லலையா?
சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு ;
இப்போது கூட ஐரோப்பிய நாடான பிரான்சின், 'கேன்ஸ்' நகரில் நடந்த சர்வதேச படவிழாவிற்கு சென்று வந்தேன். அங்கு வரும் படங்கள் எதுவுமே பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் அல்ல. தான் சொல்ல வரும் கருத்தில் எந்த சமரசமும் இல்லாமல், உறுதித்தன்மையோடு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்களே அங்கு தேர்வாகின்றன.
'எளிமையே என்றும் அழகு' என்பது சினிமாவுக்கும் பொருந்தும்... ஆனா, நம்ம ஊர்ல இருக்கிற சில, 'அப்பாடக்கர்' டைரக்டர்கள் பிரமாண்டம்கிற பேருல, தயாரிப்பாளரையும், ரசிகர்களையும் ஒருசேர படுத்தி எடுக்கிறாங்களே!
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு;
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ஆண்டுக்கு, 5,000 ரூபாயில் இருந்து, 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்க கடும் முயற்சி எடுத்தோம். கடந்த கால ஆட்சியாளர்களால், தமிழகத்தின் நிதி நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நிவாரணத் தொகையை உயர்த்தி தர முடியவில்லை. வரும் காலங்களில் நிதி நிலைமை சரியான பின், நிவாரணத் தொகையை உயர்த்தி தருவோம்.
ஆட்சிக்கு வந்து ஒரு வருஷம் ஓடி போயிடுச்சு... உங்க நிர்வாக திறமையின்மையை மறைக்க, இன்னும் பழைய ஆட்சி மீது பழிபோட்டு கொண்டிருப்பது முறையா?
பொருளாளர் பிரேமலதா பேச்சு:
தமிழகத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., என இரு கட்சிகளே ஆண்ட நிலையில் 3 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடனை ரூ 6 லட்சம் கோடியாக ஆக்கி உள்ளனர். இவற்றை எல்லாம் மாற்றி தமிழகத்தை தேசிய அளவில் முதன்மை மாநிலமாக மாற்ற தே.மு.தி.க., வுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

கண்டிப்பா உங்க கட்சிக்கும் ஒரு வாய்ப்பு குடுக்கலாம் தான்... ஆனா உங்க கட்சியின் ஆட்சி அமைந்தால் முதல்வர் யார் விஜயகாந்தா, நீங்களா, உங்க மகன் விஜய பிரபாகரனா, அல்லது உங்க தம்பி சுதீஷா என்று தான் வாக்காளர்கள் குழப்பத்தில் இருக்காங்கா!
மக்கள் நீதி மய்யம் தலைமை நிலைய பேச்சாளர், 'வியாசை' முரளி பேட்டி; கட்சிக்குள்ள எத்தனை பேர் வந்தாலும் சரி, போனாலும் சரி, மக்கள் நீதி மய்யம் கட்சி கூட இருக்கிறதோ இல்லையோ, தலைவர் கமலும், அவரை மட்டுமே நம்பும் என்னைப் போன்ற கீழ்மட்ட ரசிகர்களும், எப்போதுமே தொண்டர்களாக இருப்பர். மேல்மட்ட தலைவர்கள் சென்றாலும், நாங்கள் கமலுடனேயே இருப்போம்.
கட்சி கூட இருக்குதோ, இல்லையோன்னு ஒரு, 'பிட்'டை போட்டிருக்கீங்களே... கமல் கூடவே இருக்கிற உங்களுக்கே அந்த சந்தேகம் வந்துடுச்சா?
மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் பேட்டி;
குஜராத்தில் பல்கலைக் கழக வேந்தராக, மாநில முதல்வர் இருப்பதை முன்னுதாரணமாக கூறும் தி.மு.க., அங்குள்ள பசுவதை தடை சட்டத்தை போல, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். 'யு டியூப்' சேனலில், தவறான கருத்துக்களை பதிவிடும் தீவிரவாதிகளையும், தேசத்துரோகிகளையும் நெருங்க இந்த அரசு பயப்படுகிறது.
அதானே... குஜராத்துல மதுவிலக்கு கூடத்தான் அமலில் உள்ளது... அதை பின்பற்றி இங்கயும், 'டாஸ்மாக்'கை மூடுங்கன்னா கேட்பாங்களா?
பொள்ளாச்சி அ.தி.மு.க, - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி;
கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சொல்வது நகைச்சுவையாக உள்ளது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற உண்மையான உணர்வோடு உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து போராடியவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கச்சத்தீவு விவகாரத்தில் தற்போது, தி.மு.க.,வினர் நாடகம் ஆடுகின்றனர்.
உங்க தலைவி ஜெயலலிதாவிடம் இருந்த போராட்ட குணம், இங்க இருக்கிற மற்ற திராவிட இயக்க தலைவர்களிடம் இல்லாமல் போனது தான் பிரச்னை!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், முதல்வரின் பேச்சு, பாவம், அவர் திராவிட வெங்காய மாடலின் எடுபிடி என்பது தெரிந்தது. வரும் 2026க்கு முன்பே பா.ஜ.,வை தி.மு.க., ஆட்சியில் அமர்த்த துடிக்கிறது என்பதும் தெரிந்தது. அண்ணாமலை காட்டில் மழை தான் மே 31ல் கோட்டை முற்றுகை கோபாலபுரத்தை கதிகலங்கச் செய்யப் போகிறது.
டிரெய்லர்ல மிரட்ற படங்கள் ரிலீஸில சொதப்பிடும். அது போல உங்க பில்டப்பும் ஆகிடாம பாத்துக்கோங்க!