வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : பிரதமர் மோடியின் சென்னை வருகை, தமிழக அரசியல் களத்தை, தி.மு.க., -- பா.ஜ., இடையிலான யுத்தக் களமாக மாற்றி உள்ளது.ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின், 2021 சட்டசபை தேர்தலில் வென்று, தி.மு.க., ஆட்சியைப் பிடித்து, ஸ்டாலின் முதல்வராகியுள்ளார்.
விமர்சனம்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல வலுவான தலைமை இல்லாததால், தி.மு.க., அரசை எதிர்ப்பதில், அ.தி.மு.க., அவ்வளவாக வேகம் காட்டவில்லை.இந்த சூழலை பயன்படுத்தி, தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. 2014-ல் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது முதல், பா.ஜ.,வை கடுமையாக தி.மு.க., விமர்சித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் முதல் தி.மு.க.,வினர் அனைவரும், பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க.,வை விட, பா.ஜ.,வையே அதிகம் விமர்சித்து வருகின்றனர்; சட்டசபையிலும் இதே நிலை தான்.
இந்நிலையில், 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை துவக்கவும், அடிக்கல் நாட்டவும், 26-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க.,வினரும், பா.ஜ.,வினரும் திரண்டிருந்தனர். நிகழ்ச்சி துவங்கும் முன்பே, பா.ஜ.,வினர், 'மோடி வாழ்க' என கோஷமிட, தி.மு.க.,வினர், 'கருணாநிதி வாழ்க, ஸ்டாலின் வாழ்க' என பதிலுக்கு கோஷமிட்டனர்.விழா துவங்கியதும், ஸ்டாலின் பெயரை உச்சரிக்கும் போது தி.மு.க.,வினரும், பிரதமர் மோடி பெயரை உச்சரிக்கும் போது பா.ஜ.,வினரும் கோஷமிட, விழா அரங்கம், தி.மு.க.,- - பா.ஜ., இடையேயான போட்டி களமானது. கைகலப்பு நடந்து விடக்கூடாது என்பதற்காக, ஏராளமான போலீசார், இரு தரப்பையும் சூழ்ந்து நின்றிருந்தனர்.'ஒன்றிய அரசு' என, ஸ்டாலின் குறிப்பிடும் போதெல்லாம், தி.மு.க.,வினர் உற்சாக கோஷம் எழுப்ப, பதிலுக்கு பா.ஜ.,வினர், 'பாரத் மாதா கீ ஜெய்' என்று கோஷமிட்டனர்.மோடி பேசி முடித்ததும், 'பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம்' என கோஷமிட்டபோது, பா.ஜ.,வினர் மட்டுமே பதில் கோஷமிட்டனர்.

நம்பிக்கை
தி.மு.க.,வினர் மவுனம் காத்தனர். இதனால், கடைசி வரை என்ன நடக்குமோ என, போலீசார் டென்ஷனாகவே இருந்துள்ளனர்.தமிழகம் இதுவரை காணாத காட்சி இது. இதுவரை தி.மு.க., -- அ.தி.மு.க., இடையே தான் இதுபோன்ற போட்டியும், மோதலும் இருந்தது. கருணாநிதி அ.தி.மு.க., எதிர்ப்பையும், ஜெயலலிதா தி.மு.க., எதிர்ப்பையும் முன்னிறுத்தியே அரசியல் செய்தனர். ஆனால், அவர்கள் இருவரும் மறைந்த பின், மெல்ல மெல்ல தமிழக அரசியல் களம், தி.மு.க., - பா.ஜ., இடையிலான யுத்த களமாக மாறி வருவதை, பிரதமரின் சென்னை வருகை உணர்த்தி விட்டது என்கின்றனர்.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவத்தில் இருப்பதும், இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சூழல், பா.ஜ., வளர வாய்ப்பளிக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE