புதுடில்லி: தமிழகத்தின் தஞ்சாவூரிலிருந்து சுயஉதவிக்குழுவினர் எனக்கு புவிசார் குறியீடு கொண்ட தஞ்சாவூர் பொம்மை பரிசு அனுப்பியதாகவும், அது பெண்கள் சக்தியின் ஆசிர்வாதத்தை தாங்கி நிற்கிறது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று நடக்கும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது :
தமிழகத்தின் தஞ்சாவூரிலிருந்து சுயஉதவிக்குழுவினர் எனக்கு புவிசார் குறியீடு கொண்ட தஞ்சாவூர் பொம்மை பரிசு அனுப்பினர். இந்த பரிசு இந்தியத்தன்மையின் மணத்தையும், பெண்கள் -சக்தியின் ஆசீர்வாதத்தையும் தாங்கி நிற்கிறது. உள்ளூர் கலாசாரம் நிறைந்த இந்த பரிசை எனக்கு அனுப்பியதற்கு தஞ்சாவூர் சுயஉதவிக்குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த தஞ்சாவூர் பொம்மை அழகாக இருப்பது மட்டுமின்றி, பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு புதிய சகாப்தத்தை எழுதுகிறது.

இந்த மகளிர் சுயஉதவி குழுக்களின் கடைகள் தஞ்சாவூரில் மிக முக்கியமான இடங்களில் கைவினைப்பொருள் விற்பனை அங்காடி
(தமிழில் உச்சரித்தார் )
திறக்கப்பட்டுள்ளன. அவற்றின் பராமரிப்பின் முழுப் பொறுப்பையும் பெண்களே ஏற்றுக் கொண்டுள்ளனர். தஞ்சாவூர் பொம்மை மற்றும் வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீடு தயாரிப்புகளைத் தவிர, இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொம்மைகள், பாய்கள் மற்றும் செயற்கை நகைகளையும் உருவாக்குகின்றன. இத்தகைய கடைகளால், புவிசார் குறியீடு தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், கைவினைஞர்களுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பது மட்டுமின்றி, பெண்களும் தங்கள் வருமானம் உயர்வதன் மூலம் அதிகாரம் பெறுகிறார்கள். மக்கள் அனைவரும், தங்கள் பகுதியில் எந்தெந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய வேண்டும். நீங்கள் அவர்களின் தயாரிப்புகள் பற்றிய தகவலைச் சேகரித்து, முடிந்தவரை அந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், சுய உதவிக் குழுக்களின் வருமானத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், 'தன்னம்பிக்கை இந்தியா பிரச்சாரத்திற்கு உத்வேகம் கிடைக்கும்.
நமது நாடு பல மொழிகள், எழுத்துகள் மற்றும் பேச்சுவரக்குகளின் வளமான பொக்கிஷமாக உள்ளது. வெவ்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு உடைகள், உணவு வகைகள் மற்றும் கலாசாரம் ஆகியவை நமது தனிச்சிறப்பு. ஒரு தேசமாக இந்த பன்முகத்தன்மை நம்மை பலப்படுத்துவதுடன், நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது.
நாட்டின் தூய்மைக்கு அனைவரும் பாடுபட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைப்பது நமது கடமை. உடல் நலத்திற்கு உதவும் யோகா அனைவரும் செய்ய வேண்டும் .இவ்வாறு பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE